மோகன் ஜியின் “திரௌபதி 2” படத்தை பாராட்டிய சவுமியா அன்புமணி

பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி, “திரௌபதி 2” படத்தை பாராட்டியுள்ளார்.;

Update:2026-01-23 10:03 IST

சென்னை,

இயக்குனர் மோகன் ஜி கடந்த 2020 ம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது அதன் 2-வது பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். ரக்சனா இந்துசூடன் 'திரௌபதி தேவி'யாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நட்டி, வேலராமமூர்த்தி, நாடோடிகள் பரணி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 15-ம் தேதி வெளியாக இருந்தது. பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, இன்று வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், ‘திரௌபதி 2’ படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு படத்தை பார்த்த பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி, படம் குறித்து பாராட்டியுள்ளார்.

‘திரௌபதி 2’ ஒரு சாதாரண திரைப்படம் அல்ல; இது ஒரு வரலாற்று காவியம். தமிழ் சினிமாவில் இதுவரை பேசப்படாத திருவண்ணாமலை கதைக்களத்தை மையமாகக் கொண்டு, பாடபுத்தகங்களில் இடம்பெறாத தமிழ் மன்னர்களான வீர வல்லாளன் மற்றும் காடவராயர்களின் வீரத்தை பதிவு செய்துள்ளது. இந்த வரலாற்றை திரையில் கொண்டு வந்த இயக்குநர் மோகன் ஜிக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களை வீரமும் நேர்மையும் கொண்டவர்களாக சித்தரிப்பது மோகன் ஜியின் படங்களின் தனித்தன்மை என்றும், நெருப்பில் இருந்து பிறந்த திரௌபதி நெருப்பாகவே வாழ்ந்த கதையை இந்த படம் அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்