“33 நாட்கள் வெயிலில் படப்பிடிப்பு…வெளியாகாத முதல் படம்’’ - நடிகை ஸ்ரீ சத்யா அதிர்ச்சி தகவல்
நடிகை ஸ்ரீ சத்யா தனது முதல் படம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.;
சென்னை,
நடிகை ஸ்ரீ சத்யா, சீரியல்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அதற்கு முன்பு, உள்ளூர் அளவில் மிஸ் விஜயவாடா பட்டம் வென்று கவனம் பெற்றார். பின்னர், பிக் பாஸ் தெலுங்கு சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவர் மேலும் பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, ஸ்ரீ சத்யா தொடர்கள், பாடல்கள், சீரியல்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில், அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், தாம் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மிஸ் விஜயவாடா பட்டம் பெற்ற பிறகு, தொலைக்காட்சியில் நடிக்க முயற்சிக்கத் தொடங்கியதாக ஸ்ரீ சத்யா கூறினார். வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சித்தபோது, ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கோதாவரியில் கடும் வெயிலில் 33 நாட்கள் பணியாற்றியதாகவும் அதுவே தனது முதல் திரைப்படம் என்றும் கூறினார்.
அந்த படத்தின் இயக்குநர் தனக்கு நடிப்பின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்ததாகவும் கூறினார். ஆனால், இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் பாதியில் நிறுத்தப்பட்டதாகவும், தாம் கதாநாயகியாக நடித்த அந்த படம் இதுவரை வெளியாகவில்லை என்றும் ஸ்ரீ சத்யா தெரிவித்துள்ளார்.