"சூப்பர்மேன்" வசூல் சாதனை

இந்தியாவில் வெளியான 3 நாட்களில் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது ஹாலிவுட் படமான ‘சூப்பர்மேன்’.;

Update:2025-07-15 01:32 IST

அமெரிக்காவை சேர்ந்த ஓவியர் ஜோ சஸ்டர் மற்றும் எழுத்தாளர் ஜெர்ரி செய்கல் ஆகியோரின் கற்பனையில் உருவானது 'சூப்பர் மேன்' கதாபாத்திரம். முதல் முறையாக 1938-ம் ஆண்டு வெளியான காமிக்ஸ் புத்தகத்தில் இந்த கதாபாத்திரம் இடம்பெற்றது. அதற்கு முன்பு ஏற்கனவே காமிக்ஸ் கதைகளில் பல சூப்பர் ஹீரோக்கள் தோன்றியிருந்தாலும், சூப்பர் மேனுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து 'சூப்பர் மேன்' கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள், கார்ட்டூன்கள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்கள் வெளியாகின. பல்வேறு ஹாலிவுட் நடிகர்கள் சூப்பர் மேன்களாக திரையில் தோன்றினர். அதில் குறிப்பாக கிறிஸ்டோபர் ரீவ், ஹென்றி கவில் ஆகியோர் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் 'சூப்பர்மேன்' நடிகர்களாக திகழ்கின்றனர்.

இந்த நிலையில் 'மார்வெல்' நிறுவனத்திற்காக 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், தற்போது டி.சி. நிறுவனத்துக்காக புதிய 'சூப்பர் மேன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'சூப்பர் மேன்' கதாபாத்திரத்தில் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட் நடித்துள்ளார். 'லெக்ஸ் லூதர்' என்ற வில்லனாக நிக்கோலஸ் ஹோல்ட், கதாநாயகி லூயிஸ் லேன் கதாபாத்திரத்தில் ரச்சேல் புரோஸ்நாகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து டி.சி. நிறுவனத்திற்கு அடுத்தடுத்த சூப்பர் ஹீரோ படங்கள் வரிசையாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 'சூப்பர் மேன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த 11-ந்தேதி வெளியான்து.

'சூப்பர்மேன்' திரைப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை வெளியான 'சூப்பர்மேன்' படங்களின் வசூலை எல்லாம் இப்படம் முறியடித்துள்ளது.

படத்தின் மொத்த பட்ஜெட் 225 மில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் வெளியான இரண்டு நாட்களிலேயே இப்படம் 217 மில்லியன் டாலர் வசூலித்துவிட்டது. டிசி காமிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்களுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவிலும் 'சூப்பர்மேன்' படம் குறிப்பிடத்தக்க வசூல் சாதனை செய்துள்ளது. இதற்கு முன் வெளியான டிசி படங்களின் வசூலை விட 55 சதவீதம் அதிக வசூலை இப்படம் செய்துள்ளது. மேலும் கடந்த வாரம் வெளியான 'மாலிக்', 'ஆங்கோன் கி குஸ்தான்கியான்' போன்ற இந்தி படங்களை பின்னுக்குத் தள்ளி ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்