“காதல் ரீசெட் ரிப்பீட்” படத்தின் “யம்மா கஜினி” பாடல் டிரெண்டிங்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.;
மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையிசை உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தினார். கமல், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர். கடைசியாக ரவி மோகன் நடித்த பிரதர் படத்திற்கு இசையமைத்திருந்தார். இசையமைப்பாளர் ஹாரிஸ் தற்போது உலகெங்கும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். சிங்கப்பூர், மலேசியா, போன்ற நாடுகளிலும் கான்சர்ட் நடத்தி வருகிறார். கனடா நாட்டின் டொரண்டோவில் தனது இசைக்குழுவுடன் கான்சர்ட் செய்திருந்தார். இதற்காக அந்நாட்டு அரசு ஹாரிஸ் ஜெயராஜை கவுரவித்திருக்கிறது.
‘காதல் ரீசெட் ரிப்பீட்’ என்ற தலைப்பில் ஒரு புதுப் படம் உருவாகிறது. இப்படத்தை விஜய் இயக்க மதுமகேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா சங்கர், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி ஸ்டூடியோஸ் - டென்வி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பட நாயகன், யாரையாவது அவருக்கு பிடித்துவிட்டால் உடனே கடத்தி விடும் பழக்கம் கொண்டவராக இருக்கும் நிலையில் அவருக்கு ஹாரிஸ் ஜெயராஜை மிகவும் பிடிப்பதால் அவரை கடத்தும்படி டைட்டில் அறிவிப்பு புரொமோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் ‘யம்மா கஜினி’ பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது. இப்பாடல் மதன் கார்க்கி வரிகளில் அசல் கோலார் பாடியுள்ளார்.