இதனால் தான் சினிமாவில் இருந்து விலகி இருந்தேன் - நடிகை ரம்பா
என்னுடைய முதல் காதல் எப்போதுமே சினிமாதான் என்று ரம்பா கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் 90-களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்பா. ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்த ரம்பா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ஜோடி ஆர் யூ ரெடி' என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.
இதற்கிடையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரம்பா, ஏன் இத்தனை நாட்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார் என்பதை விளக்கியுள்ளார். அதாவது, "எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது, என் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயது வரும் வரை குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அவர்களுடன் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இதனால் தான் நான் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி குழந்தைகளுடன் இருந்தேன். ஆனால் நடிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும் என்னுடைய முதல் காதல் எப்போதுமே சினிமாதான்" என்று கூறியுள்ளார்.