ஏ.வி.எம்.சரவணன் குறித்து வைரமுத்து உருக்கம்

ஏ.வி.எம்.சரவணன் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.;

Update:2025-12-06 07:01 IST

சென்னை,

ஏ.வி.எம்.சரவணன் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி' படத்திற்குப் பாட்டெழுதியதற்கு ஊதியமாக ஏ.வி.எம்.சரவணன் எனக்கொரு காசோலை கொடுத்தார். சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு காசோலை கொடுத்தார். நான் குழப்பமானேன்.

‘‘போனவாரம் இந்த படத்திற்கு வாலி ஒரு பாட்டெழுதினார். உங்களுக்குக் கொடுத்த ஊதியத்தையே அவருக்கும் கொடுத்தோம். அவரோ மேலும் ரூ.1 லட்சம் வேண்டுமென்று கேட்டார், கொடுத்துவிட்டோம். வாலியோடு ஒப்பிடுகிறபோது உங்களுக்கு குறைத்து கொடுத்திருப்பது நீதியில்லை.

வாலிக்குக் கொடுத்த தொகையை உங்களுக்கும் கொடுப்பதென்று முடிவெடுத்தோம். அதுதான் இந்தத் தொகை. இதில் ரூ.1 லட்சம் இருக்கிறது'', என்று சொன்னார்.

நான் பெற்றுக்கொண்டு ‘இரண்டாம் நன்றி உங்களுக்கு, முதல் நன்றி வாலிக்கு. என் சம்பளத்தை உயர்த்தியவர் அவர்தானே... வாலி, வாழி' என்றேன். வாய்விட்டுச் சிரித்தார். அந்தச் சிரிப்பையும் சேர்த்து மின்மயானம் எரித்துவிட்டது. எரி மேடையில் உடல் கிடத்தப்பட்டிருந்தபோது காசோலையில் கையொப்பமிட்ட அவர் கையையே பார்த்துக்கொண்டிருந்தேன், கண்ணில் நீர் முட்டியது, என்று வைரமுத்து உருக்கம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்