“சிறை” படத்தில் மீண்டும் போலீசாக நடித்தது குறித்து விக்ரம் பிரபு விளக்கம்
விக்ரம் பிரபு, அனந்தா நடித்துள்ள ‘சிறை’ படம் வருகிற 25ம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த ‘டாணாக்காரன்’ படத்தைத் தொடர்ந்து, அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடித்திருக்கிறார். இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘சிறை’ என்ற பெயரில் எழுதிய கதையே தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. இதனை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார். வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
‘சிறை’ படத்தின் புரோமோசனில் மீண்டும் போலீசாக நடித்தது குறித்து விக்ரம் பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதில் “‘சிறை’ எனது 25வது படம், தாத்தாவும், அப்பாவும் தங்களின் முதல் 25 படத்தில் சாதித்த அளவிற்கு நான் எதையும் சாதிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த படங்கள் வெற்றியோ, தோல்வியோ ஆனால் நல்ல படங்கள் என்பதிலேயே எனக்கு திருப்திதான். அதிகமாக போலீஸ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறேன். எனது தோற்றத்தை மனதில் வைத்து அப்படியான கேரக்டரோடு தான் கதை சொல்ல வருகிறார்கள். இனி போலீஸ் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தபோது வந்த கதைதான் ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குனர் தமிழ் இந்த கதை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை. ஆனால் ‘டாணாக்காரன்’ படத்தின் கேரக்டருக்க உயிர் கொடுத்தது போன்று இந்த படத்தின் கேரக்டருக்கு உயிர் கொடுக்க உங்களால்தான் முடியும் என்று சொன்னதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
‘டாணாக்காரன்’ படத்தில் பயிற்சி போலீஸ் என்பதால் எடை குறைத்து நடித்தேன். இதில் அதிகாரி என்பதால் எடையை கூட்டி நடித்திருக்கிறேன். தெலுங்கில் நடித்த 'காட்டி' படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. நானே டப்பிங் பேசி நடித்தேன். அனுஷ்கா நல்ல தோழியாக அமைந்தார். அவரது இரக்க குணத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் வருகிறது. தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். 25 படங்களில் நடித்து விட்டேன். அடுத்து வரும் 25 படங்களில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். இத்திரைப்படம் வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.