டிரோல் மற்றும் எதிர்ப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்- சமந்தா
புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் சமந்தா ஆன்லைன் டிரோல் குறித்து பேசியுள்ளார்.;
சென்னை,
இந்திய திரை உலகில் பிரபல நடிகையான சமந்தா தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி சுபம் என்ற படத்தை தயாரித்தார். படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அதனை தொடர்ந்து புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் சமந்தா ஆன்லைன் டிரோல் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சோசியல் மீடியாக்களில் உண்மையாக இருப்பது முக்கியம் என நான் நினைக்கிறேன். அனைத்து விஷயங்களில் இருந்தும் பாதுகாப்பான தூரத்தை வைத்திருப்பது முக்கியம். வலைதளங்களில் வெளியாகும் பாராட்டுகளை நாம் ஏற்றுக் கொள்வது என்றால் டிரோலிங் மற்றும் எதிர்ப்புகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என் வாழ்க்கையில் சமூக ஊடகங்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் நான் அதிகம் மதிக்கும் நபர்களை கண்டு கொண்டேன். அவர்கள் என் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பெரிதும் உதவினர். எனவே சமூக வலைதள கருத்துக்களை மோசமானது என்று நான் நினைக்கவில்லை. ஆனால் சோசியல் மீடியாக்கள் உங்கள் வாழ்க்கையை முழுமையாக கட்டுப்படுத்த விடக்கூடாது.
நான் இனி ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிக்கப்போவதில்லை. நான் உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிப்பதற்கு முன் நான் என் உடலை கேட்க வேண்டும். எனவே நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளேன் உடல் நலப் பிரச்சினை ஏற்படும் வரை உங்களுக்கு 100 பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு உங்களுக்கு ஒரே ஒரு பிரச்சினை மட்டுமே இருக்கும். அதுதான் உடல்நலப் பிரச்சினை என்று ஒரு பழமொழி உண்டு. வாழ்க்கையில் உள்ள அனைத்தும் என் உடல் நலத்தை கவனித்துக் கொள்வதை நோக்கி செல்கின்றன. வெளிப்படையாக சொல்லப்போனால் என் வாழ்க்கை தற்போது மிகவும் எளிமையான வாழ்க்கையாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.