என்னை மோசமான ஆளாக ஆக்கிட்டீங்களே.. கங்கை அமரன் கதறல்
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கங்கை அமரன் தனக்கு பின்னால் நின்ற ரசிகரிடம் ஆத்திரம் கொண்டார்.;
சென்னை,
இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தந்தார். அப்போது தனக்கு பின்னால் நின்ற ரசிகரிடம், ‘முக்கியமானவர்கள் பேட்டிக்கொடுக்கும்போது இப்படி பக்கத்தில் இருந்து முறைப்பதா?' என்று ஆத்திரம் கொண்டார்.
இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சோகமாக நகர்ந்து விட்டார். கங்கை அமரனின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ‘பிரபலங்கள் அருகில் ரசிகர்கள் நிற்கக்கூடாதா? இந்த கோபம் அவசியமா?' என்றெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பின.
இதுகுறித்து கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ‘‘நடிகர் சிவகுமார் கூட ஒரு நிகழ்ச்சியில் செல்போனை தட்டிவிட்டார். அதை விட்டுவிட்டார்கள். ஆனால் என்னை பிடித்து விமர்சிக்கிறார்கள்.
நான் பேசும்போது, அருகில் இருந்த அந்த நபர் என்னை பார்க்காமல் கேமராவை பார்த்து குதூகலிக்கிறார். இதனால் தொந்தரவு தானே ஏற்படும். அந்த நிகழ்ச்சியில் சுமார் 300 பேர் என்னிடம் வந்து ‘செல்பி' எடுத்தார்கள். அதில் அலுத்துப்போய் வெளியே வந்த சமயம், இப்படி ஒரு தொந்தரவை சந்தித்ததால் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது. அதனால் தான் அப்படி நடந்துகொண்டேன். அதை பெரிதுபடுத்தி என்னை மோசமான ஆளாக ஆக்கிட்டீங்களே...'' என்று கதறலுடன் கூறி சிரித்தார்.