“அகண்டா 2” - சினிமா விமர்சனம்

போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் பாலையா நடித்த ‘அகண்டா 2’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;

Update:2025-12-13 15:59 IST

அகண்டா முதல் பாகத்தில் தனது தம்பி மகளுக்கு ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக அங்கு நான் வருவேன் என அகண்டா சத்தியம் செய்திருந்தார். அதன் பிறகு கதை தொடர்கிறது. ஆண்டுகள் கடந்து செல்ல பாலைய்யாவின் மகளான ஹர்ஷாலி வளர்ந்து விஞ்ஞானியாக வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் இந்தியாவை வீழ்த்தும் எண்ணத்துடன் இந்தியர்கள் பலரைக் கொன்று குவிக்கிறார், அண்டை நாட்டு ராணுவ ஜெனரல் ஆதி.

இந்தியர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கக் கூடாது அனைவரும் கடவுளை வெறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மகா கும்பமேளாவுக்கு வரும் மக்கள் மீது கொடிய வைரஸை பரப்பி விடுகிறார். இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அந்த வைரஸ் பரவ, நாடு முழுவதும் பிரச்சினை வெடிக்கிறது. 'இனி எங்கிருந்து வந்த அந்த கடவுள் நம்மை காக்க போகிறார்' என கடவுள் மீதுள்ள நம்பிக்கையை கைவிடுகிறார்கள் மக்கள். பரவிக்கொண்டிருக்கும் வைரஸை அழிக்கும் மருந்தை ஹர்ஷாலி கண்டுபிடித்து விட்டதை அறிந்து அவரையும் கொல்ல சதி நடக்கிறது. ஜனனியை காப்பாற்ற மீண்டும் அகண்டா வந்தாரா இல்லையா? கடவுள் நம்பிக்கை மீண்டும் மக்கள் மத்தியில் வந்ததா இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. 

ஒட்டுமொத்த கதையையும் தோளில் சுமந்து மாஸ் வேட்டை நடத்தி இருக்கிறார் பாலகிருஷ்ணா. ஆக்சன் காட்சிகளிலும், பஞ்ச் டயலாக் பேசுவதிலும் தெறிக்கவிட்டுள்ளார். பாலகிருஷ்ணா ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் தான்.

பாலகிருஷ்ணா தாண்டி யாரும் பெரிய அளவில் கவனம் இருக்கவில்லை என்றாலும் ஆதி, சம்யுக்தா மேனன், ஹர்ஷாலி, ஜெகபதி போஸ் உள்ளிட்டோர் ஓரளவு கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளனர். இடைவேளை காட்சிகளும் அதன் பின்னர் வரும் சில நிமிடங்களும் புல்லரிக்க வைத்துள்ளன. ஆக்சன் அதிரடி காட்சிகள் படத்துக்கு பலம். ஓரளவு யூகிக்க முடிகிறது என்ற திரைக்கதை பலவீனம். படத்தின் நீளத்தையும் குறைத்து இருக்கலாம். 

பாலகிருஷ்ணா என்ற கூர்மையான ஆயுதத்தை 4-வது முறையாக பட்டை தீட்டி இருக்கும் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு, இந்த முறையில் மாஸ் கதையை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

அகண்டா-2 - தாண்டவம்

Tags:    

மேலும் செய்திகள்