"அங்கம்மாள்" படம் எப்படி இருக்கிறது?- சினிமா விமர்சனம்
இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.;
சென்னை,
இளம் வயதிலேயே கணவரை இழந்த கீதா கைலாசம், தனது 2 மகன்களை கஷ்டப்பட்டு வளர்க்கிறார். 'ஜாக்கெட்' அணியாத பழமைவாதியாகவும் வலம் வருகிறார். மூத்த மகன் பரணி விவசாயி. இளைய மகன் சரண் டாக்டர். இதில் பரணிக்கு திருமணமாகி அம்மாவுடன் இருக்கிறார். சரண் பணக்கார வீட்டு பெண்ணான முல்லையரசியை காதலிக்கிறார். இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையில் பெண் வீட்டார் ஏதாவது நினைத்து விடுவார்களோ... என்று தயங்கும் சரண், திருமணத்துக்குள் எப்படியாவது தனது அம்மாவை 'ஜாக்கெட்' அணிய செய்துவிட வேண்டும் என்று, தனது அண்ணி தென்றலுடன் சேர்ந்து போராடுகிறார். 'ஜாக்கெட்' அணியமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கும் கீதா கைலாசம் தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுத்தாரா? சரணின் திருமணம் நடந்ததா? என்பதே மீதி கதை.
சுருட்டு பிடிப்பது, 'ஜாக்கெட்' அணியாமல் வலம் வருவது, அனைவரையும் ஆளுமையால் மிரட்டுவது, ஸ்கூட்டரில் ஒய்யாரமாக பவனி வருவது என அந்தக்கால கிராமத்து பெண்மணியாகவே மாறிப் போயிருக்கிறார், கீதா கைலாசம். சகட்டு மேனிக்கு கெட்ட வார்த்தைகளையும் கொட்டியிருக்கிறார். மகன்களாக வரும் பரணியும், சரத்தும் பொருத்தமான தேர்வு. தென்றல், முல்லையரசி, சுதாகர், யாஷ்மின் என அனைவரது நடிப்பிலும் எதார்த்தம்.
என்ஜாய் சாமுவேல் ஒளிப்பதிவில் கிராமத்தில் பயணிப்பது போல இருந்தாலும், ஒரே காட்சியை அடிக்கடி பார்ப்பது போன்று தோன்றுகிறது. தவறா, தப்பா? முகமது மக்பூல் மன்சூரின் இசை ரசிக்க வைக்கிறது. எதார்த்தம் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகளில் போதிய தெளிவு இல்லை. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். தென் தமிழகத்தில் கதை நடப்பதாக காட்டியிருந்தாலும், பேச்சு மொழியில் ஏதோ 'மிஸ்' ஆகிறது.
ஒரு கிராமத்து கதையை எதார்த்தமான காட்சிகளால் அடுக்கி கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன்.
அங்கம்மாள் - பழமைவாதி