இப்படிக்கு தேவதை

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

Update: 2022-09-11 01:30 GMT

நான் கல்லூரியில் படித்து வருகிறேன். பள்ளிப் படிப்பு முழுவதும் தமிழ் வழியில் படித்தேன். கல்லூரியில் ஆங்கில வழியில் கற்கிறேன். ஆங்கிலத்தில் பேசுவதும், மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதும் சிரமமாக இருக்கிறது. சக மாணவிகள் ஆங்கிலத்தில் பேசும்போது, அவர் களிடம் பேசுவதற்கு எனக்கு அதிக தயக்கம் இருக்கிறது. இதனால் யாரிடமும் நான் பழகுவதில்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சக மாணவிகளிடம் பேசுவதற்கு முயன்றாலும், அவர்கள் அருகில் சென்றவுடன் பதற்றம் அடைந்து விடுகிறேன். தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு உதவுங்கள்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எந்த மொழியுமே நாம் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு உதவும் ஒரு கருவிதான். அதை உங்கள் சுயமரியாதையை பாதிக்கும் விஷயமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். உலகைப் பற்றிய உங்கள் பார்வையும், மதிப்பீடுகளுமே உங்களை வரையறுக்க வேண்டும்; உங்கள் ஆங்கிலப் புலமை அல்ல. இதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

பேச்சு மொழிப் புலமை என்பது வாகனம் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெறுவது போன்றது. நீங்கள் எவ்வளவு அதிகமாக பயிற்சி செய்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக தேர்ச்சி பெறுவீர்கள். ஆங்கிலப் புத்தகங்களைப் படியுங்கள். ஆங்கிலத் திரைப்படங்களைப் பாருங்கள்.

உங்கள் வகுப்புத் தோழிகளிடம் இருந்து விலகாதீர்கள். அவர்கள் பேசுவதைத் தொடர்ந்து கேட்டுவரும்போது, மொழியின் பயன்பாடு உங்களுக்குத் தெரியும். அப்போது ஆங்கிலத்தில் பேசுவது எளிமையாக இருக்கும். உங்களுக்கு இருக்கும் சிரமத்தைப் பற்றி சக மாணவிகளிடம் எடுத்துக்கூறுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்!

நான் 11-ம் வகுப்பு படிக்கிறேன். எனது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். எனது தங்கை 8-ம் வகுப்பு படிக்கிறாள். எனது உறவுக்கார அண்ணன் கடந்த 5 வருடங்களாக எங்கள் வீட்டில் தங்கி பெற்றோருடன் வேலை செய்து வருகிறான். அவனுக்கு 20 வயது ஆகிறது. எங்கள் இருவரிடமும் அதிக பாசத்துடன் பழகுவான். எங்கள் பெற்றோர் அவனை பெற்ற மகன் போலவே நடத்துகின்றனர். எங்கள் வீடு சிறியது என்பதால், நாங்கள் அனைவரும் ஒரே அறையில்தான் தூங்குவோம். அண்ணன் எனக்கு அருகில் தூங்குவான்.

சில நாட்களாக நடு இரவில் என் மீது அண்ணனின் கை தவறான நோக்கத்துடன் அணுகுவது போலப் படுகிறது. தொடர்ந்து சில நாட்கள் தூங்காமல் கவனித்தபோது அவன் அவ்வாறு நடந்துகொள்வது தற்செயலானது இல்லை என்று தெரிந்தது. இதைப் பற்றி எனது அம்மாவிடம் சொன்னபோது நான் தவறாக பேசுவதாக என்னை அடித்து விட்டார். அப்பா மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரிடம் இதுபற்றியெல்லாம் பேச முடியாது. இப்போது நான் யாரிடம் இதை சொல்வது, இதற்கு என்ன தீர்வு? என்று தெரியவில்லை. வழிகாட்டுங்கள்.

உங்கள் தாயால் உங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் போனது வருத்தத்துக்கு உரியது. இருப்பினும் இந்த சிக்கலை உங்களால் மட்டுமே தீர்க்க முடியும். நீங்கள் அவனிடம் இதுபற்றி பேசுங்கள். அவனது வயதின் காரணமாக ஏற்படும் மாற்றங்கள், அவனை அவ்வாறு செய்யத் தூண்டுவதை நீங்கள் உணர்கிறீர்கள் என்றும், ஆனால் அவன் அவ்வாறு நடந்துகொள்வது தவறானது என்றும் துணிவோடு அழுத்தமாகவும், அமைதியாகவும் சொல்லுங்கள். அவன் தனது தவறை உணர்ந்தால், மன்னித்து அவனுடன் இயல்பாக இருங்கள். பெண்களின் வாழ்க்கையில் இதுபோன்ற சூழ்நிலைகள், எந்த நேரத்திலும் ஏற்படலாம். அப்போது துவண்டுவிடாமல் நமக்காக நாம் போராடித்தான் ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர். 

Tags:    

மேலும் செய்திகள்