இப்படிக்கு தேவதை

மகிழ்ச்சியான திருமணத்தின் உண்மையான சாராம்சம், விட்டுக்கொடுத்து வழிநடத்துதல் மற்றும் சமரசமாக செல்லுதலில் தான் இருக்கிறது.

Update: 2023-01-08 01:30 GMT

1. னக்கு 28 வயது. ஏழ்மையான குடும்பம். பல கஷ்டங்களுக்கு இடையில் பட்டப்படிப்பை முடித்தேன். சில வருடங்களுக்கு முன்பு தந்தை இறந்தார். அதனால் தாய், குடும்ப பொறுப்புகளை என்னுடைய மூத்த தம்பியிடம் ஒப்படைத்தார். அப்போது முதல் அவன் யாருடைய பேச்சையும் மதிப்பதில்லை. இதற்கிடையில் சொந்தத்தில் இருந்து ஒருவர் என்னைப் பெண் கேட்டு வந்தார். என் தம்பி அந்த வரனை நிராகரித்தான். அவரோ என்னை தான் திருமணம் செய்வேன் என்று காத்திருக்கிறார். இப்படியே 3 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் என் குடும்பத்தார் "நாங்கள் பார்ப்பவருக்கு நீ கழுத்தை நீட்டினால் போதும்" என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்.

பட்டதாரியான நீங்கள், இதுவரை எந்த பணிக்கும் செல்லாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. நீங்கள் பொருளாதார ரீதியாக உங்கள் சகோதரரை சார்ந்து இருப்பது தெரிகிறது. உங்கள் திருமணம் போன்ற விஷயங்களில் கூட, நீங்கள் உங்கள் சகோதரரின் முடிவுகளை சார்ந்து இருக்கிறீர்கள். உங்கள் தாயும் முடிவு எடுக்கும் நிலையில் இல்லை. ஏனெனில் அவர் உணர்ச்சி மற்றும் நிதி ரீதியாக உங்கள் சகோதரனைச் சார்ந்து இருக்கலாம். உங்களுக்கென ஒரு வேலையைத் தேடுவதே நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி. இதன் மூலம் நீங்கள் சுயமான முடிவுகளை எடுக்க இயலும். அதன்பிறகு, உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர் 'சரியான தேர்வு' என்று நீங்கள் உணர்ந்தால், உங்கள் வாழ்க்கையைப் பற்றிய உறுதியான முடிவை எடுங்கள். ஆனால், அதற்கு முன்பு உங்களுக்கு நிதி சுதந்திரம் அவசியம்.

2. சில வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தேன். கணவர் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து உறவினர்கள் தயவால் வளர்ந்தவர். அவரது உறவுகள் எங்கள் திருமணத்தை ஏற்கவில்லை. இந்த நிலையில் அடிக்கடி பண உதவி கேட்கிறார்கள். ஆனால் வாங்கிய பணத்தை திரும்பத் தருவது இல்லை. நாங்கள் எங்கள் அலுவலகத்துக்கு அருகிலேயே குடியிருக்கிறோம். அவர்கள் இருக்கும் பகுதிக்கு குடி வரும்படி நச்சரிக்கிறார்கள். கணவரும் அவர்கள் சொல்வதைக் கேட்டு என்னை வற்புறுத்துகிறார். இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு வருகிறது. இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள்.

உங்கள் கணவர் தனது உறவினர்களுக்கு நிதி உதவி செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்றி காட்டுவது போல் தெரிகிறது. இந்த கட்டத்தில் நீங்கள் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றால், உங்கள் இருவருக்கும் இடையே இடைவெளி உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகும் நிலையில், கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த இடைவெளி அதிகரிக்கலாம். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ வேண்டும். மகிழ்ச்சியான திருமணத்தின் உண்மையான சாராம்சம், விட்டுக்கொடுத்து வழிநடத்துதல் மற்றும் சமரசமாக செல்லுதலில் தான் இருக்கிறது.

உங்கள் கணவரின் முடிவுக்கு உடன்படுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பிற்காலத்தில் அதை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், உங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டால் அதை சீர்படுத்துவது மிகவும் கடினமானது. தர்க்கரீதியாகவோ, உணர்வுப்பூர்வமாகவோ சிந்திக்காமல் புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள். உங்கள் கணவர் தனது முடிவின் மூலம் சிரமங்களை அனுபவிக்கும்போது, அவரே அதை மாற்றிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாகும். அவரது முடிவுக்கு நீங்கள் ஆதரவாக இருப்பதால், உங்கள் திருமண வாழ்க்கை பிணைப்பின் ஆழம் அதிகரிக்கும். உங்கள் கருத்தை அவருக்குப் புரிய வைப்பது எளிதாகும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.

Tags:    

மேலும் செய்திகள்