இப்படிக்கு தேவதை

எந்த உறவையும் பயத்தில் கட்டமைக்க முடியாது. அது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே கட்டமைக்கப்படும். உங்களுடைய முக்கியமான உறவுகளிடம் அத்தகைய நம்பிக்கையை உருவாக்குங்கள்.

Update: 2023-05-28 01:30 GMT

1. ன் கணவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால், 3 வருடங்களுக்கு முன்பு அவருக்கு என்னை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் இருந்தே கணவர் என்னுடன் சரியாகப் பழகுவது இல்லை. இருவரும் அந்தரங்க உறவில் ஈடுபடும்போது கூட சில நேரங்களில் பாதியிலேயே என்னைவிட்டு விலகிவிடுகிறார். இதுகுறித்து ஒருநாள் அவரிடம் கேட்டபோது, முதல் மனைவியுடன் வாழ்ந்த நினைவுகளை மறக்க முடியாததால் என்னுடன் இயல்பாக இருக்க முடியவில்லை என்கிறார். பழைய நினைவுகளில் இருந்து விலகி அவர், என்னுடன் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும்?

முதல் மனைவியின் இழப்பில் இருந்து மீண்டு வருவதற்கு முன்பாகவே உங்களை திருமணம் செய்துகொள்வதற்கு அவர் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாக தெரிகிறது. பழைய வாழ்க்கையின் நினைவுகள் அவரை தொந்தரவு செய்துகொண்டிருக்கலாம். அதை நீங்கள் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது அவரை பழைய நினைவுகளில் இருந்து விரைவாக வெளிக்கொண்டு வரும். உங்களுடன் திருமணமாகி 3 வருடங்கள் ஆகியும், அவரால் உங்களோடு நெருங்கிப் பழக முடியவில்லை என்பது சற்றே வருத்தத்துக்குரியது. எனவே நீங்கள் இருவரும் ஒரு மனநல ஆலோசகரை அணுகுவது நல்லது. அதன் மூலம் அவர் குணமடையவும், நீங்கள் உணர்ச்சி ரீதியாக காயமடைவதைத் தடுக்கவும் முடியும். அவருடைய நிலையை நீங்கள் புரிந்து கொண்டாலும், அந்தச் சூழ்நிலையில் நீங்கள் நிராகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவதாக உணர்கிறீர்கள். எனவே விரைவாக மனநல ஆலோசகரின் உதவியை நாடுங்கள்.

2. நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். எனக்கு 2 மூத்த சகோதரிகள் உள்ளனர். எங்கள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது சகோதரியின் கணவருக்கும், எனக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், நானும் சகோதரியும் ஒருவருக்கொருவர் பேசுவது இல்லை. நானும், மூத்த சகோதரியும் ஒற்றுமையாக இருப்பது, என்னுடைய இரண்டாவது சகோதரிக்கு பிடிக்கவில்லை. அவரால் மூத்த சகோதரிக்கும், எனக்கும் இடையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ? என்ற பயத்துடனேயே மூத்த சகோதரியுடன் பழகி வருகிறேன். இந்த நிலையை நான் எவ்வாறு கையாள வேண்டும்?

முதல் சகோதரியுடனான உங்கள் உறவு, சிறந்த புரிதல் மற்றும் வெளிப்படையான தொடர்பு அடிப்படையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் இரண்டாவது சகோதரி என்ன செய்தாலும், முதல் சகோதரியுடனான உங்கள் உறவு நிலையானதாக இருக்கும். இந்த உறவைக் கெடுக்க உங்கள் இரண்டாவது சகோதரி அதிகபட்சமாக என்ன செய்வார் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் முதல் சகோதரியிடம் உங்கள் பயத்தை வெளிப்படையாகத் தெரிவியுங்கள். என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை அவரும் அறிந்திருப்பது நல்லது. உங்கள் முதல் சகோதரி உங்களைப் பற்றி சரியாக புரிந்துகொண்டு இருந்தார் என்றால், உங்களுடைய பயம் தேவையற்றது. எந்த உறவையும் பயத்தில் கட்டமைக்க முடியாது. அது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே கட்டமைக்கப்படும். உங்களுடைய முக்கியமான உறவுகளிடம் அத்தகைய நம்பிக்கையை உருவாக்குங்கள்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர். 

Tags:    

மேலும் செய்திகள்