பயணத்துக்கான 'மேக்கப் கிட்'

கண் இமைகளில் மஸ்காரா தடவுவது, கண்களை சிறப்பாக அழகுபடுத்திக்காட்டும். பயணத்தின்போது எடுத்துச் செல்வதற்கு, தண்ணீரில் கரையாத வாட்டர் புரூப் மஸ்காராவை தேர்வு செய்வது நல்லது.

Update: 2023-02-12 01:30 GMT

யணம் செய்வது எப்போதும் சுவாரசியம் நிறைந்தது. நீங்கள் முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்கிறீர்கள் என்றால், அப்போது உங்களின் தோற்றம் 'பளிச்' என இருப்பது முக்கியம். ஆனால், பயணம் செய்யும் பொழுது குறைவான பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல நேரிடும். அத்தகைய சூழ்நிலையில், மேக்கப் செய்வதற்கு உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களில் எவற்றையெல்லாம் உடன் கொண்டு செல்ல வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும்.

அதற்கு தீர்வாக, பயணத்தின்போது உங்கள் மேக்கப் கிட்டில் இருக்க வேண்டிய பொருட்களின் தொகுப்பு இதோ...

மாய்ஸ்சுரைசர்:

தரமான மாய்ஸ்சுரைசர் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இது சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து வெடிப்பு, முகப்பரு போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். பயணத்தின்போது மாறக்கூடிய தட்பவெப்பக் காரணிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க மாய்ஸ்சுரைசர் அவசியம். மேக்கப் போடுவதற்கு முன்பு மாய்ஸ்சுரைசர் பூசுவது நல்லது.

பி.பி. அல்லது சி.சி. கிரீம்:

பயணத்தின்போது பவுண்டேஷன் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக பி.பி. அல்லது சி.சி. கிரீம் பயன்படுத்தலாம். இவை சருமத்துக்கு சீரான தோற்றத்தைத் தருவதோடு மட்டுமில்லாமல், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தையும் தடுக்கும்.

கன்சீலர்:

பயணத்தின்போது எடுத்துச் செல்லும் மேக்கப் கிட்டில் கன்சீலர் தவிர்க்க முடியாத ஒன்று. கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மற்றும் முகத்தில் திட்டுத்திட்டாக படர்ந்திருக்கும் கருமையை மறைக்க இது உதவும். கன்சீலர் போட்ட பின்னர் அதனை காம்பேக்ட் பவுடர் உபயோகித்து 'செட்' செய்தால் போதும். முகம் 'பளிச்' என்று இருக்கும்.

காம்பேக்ட் பவுடர்:

பயணத்துக்கான மேக்கப் கிட்டில் நீங்கள் தவறவிடக்கூடாத அழகு சாதனப் பொருள் காம்பேக்ட் பவுடர். மேக்கப்பை முழுமையாக நிறைவு செய்வதற்கு இது அவசியம். உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற காம்பேக்ட் பவுடரைத் தேர்வு செய்வது முக்கியம்.

கிரீம் பிளஷ்:

பயணத்தின்போது பவுடர் வடிவ பிளஷ் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம். கிரீம் வடிவத்தில் இருக்கும் பிளஷ் சிறந்த தேர்வாகும். உங்கள் நிறத்துக்கு ஏற்ற வகையில் 'பிளஷ்' தேர்வு செய்வதும் முக்கியமானது. இது முகத்துக்கு இயற்கையான தோற்றத்தைக் கொடுக்கும்

வாட்டர் புரூப் மஸ்காரா:

முகத்தின் அழகை மேம்படுத்திக் காட்டுபவை கண்கள். கண் இமைகளில் மஸ்காரா தடவுவது, கண்களை சிறப்பாக அழகுபடுத்திக்காட்டும். பயணத்தின்போது எடுத்துச் செல்வதற்கு, தண்ணீரில் கரையாத வாட்டர் புரூப் மஸ்காராவை தேர்வு செய்வது நல்லது.

லிப்ஸ்டிக்:

பயணத்தின்போது நீங்கள் உடுத்தும் ஒவ்வொரு ஆடைக்கும் ஏற்ற நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கை எடுத்துச் செல்வது சிரமமானது. எனவே பொதுவான நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கை கொண்டு செல்லலாம். அடர் நிறங்களை விட, வெளிர் நிறங்களை உபயோகிப்பது சிறந்தது.

மேக்கப் ரிமூவர்:

பயணம் காரணமாக எவ்வளவு சோர்வு ஏற்பட்டாலும், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு மேக்கப்பை கலைத்து சருமத்துக்கான பராமரிப்பு களை செய்வது சிறந்தது. எனவே உங்கள் பயணத்துக்கான மேக்கப் கிட்டில் 'மேக்கப் ரிமூவர்' கட்டாயம் இடம்பெற வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்