மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டியவை

பெண்களுக்கான முக்கியமான மருத்துவச் செலவுகளில் மகப்பேறு செலவும் ஒன்று. இன்றைய காலத்தில் மகப்பேறு செலவு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மகப்பேறு செலவுகளும் அடங்கியுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.

Update: 2023-07-02 01:30 GMT

ண்களுக்கு இணையாக பெண்களும் வேலை, தொழில் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். குடும்பம், வேலை என்று இரண்டு பொறுப்புகளையும் சுமப்பதால் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு உதவும் வகையில் பல காப்பீட்டு நிறுவனங்கள், பிரத்தியேக மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.

எந்த அடிப்படையில் இந்த திட்டங்களை தேர்வு செய்வது, எந்த காப்பீடு அதிக பலன் தரக்கூடியது போன்ற குழப்பங்கள் பலருக்கு இருக்கலாம். ஆண்களுக்கான மருத்துவ தேவைகளும், பெண்களுக்கான மருத்துவ தேவைகளும் வெவ்வேறாக இருப்பதால் பொதுவான கருத்துகளைக் கொண்டு ஒரு பெண் தனக்கான மருத்துவக் காப்பீட்டை தேர்வு செய்ய முடியாது. அந்தவகையில் பெண்கள் மருத்துவக் காப்பீடு எடுப்பதற்கு முன்பு எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

30 வயதிற்குள் மருத்துவ காப்பீடு: பெண்களுக்கு 30 வயது நெருங்க ஆரம்பிக்கும்போதே உடல் ரீதியான பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். ஏற்கனவே உடல்நலக் கோளாறுகள் இருக்கும்போது, தனக்கு பொருத்தமான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்வது கடினமான இருக்கும். எனவே, பெண்கள் 30 வயதை நெருங்குவதற்கு முன்பே மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது.

பெண்கள் சார்ந்த நோய்கள் காப்பீட்டில் அடங்கிஉள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்:

40 வயதை அடையும் பெண்கள் மார்பக புற்றுநோய், பிறப்புறுப்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், எலும்பு தொடர்பான நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது மருத்துவக் காப்பீட்டு திட்டங்களில் இதுபோன்ற பெண்கள் சார்ந்த நோய்களை சேர்ப்பது இல்லை. எனவே மருத்துவக் காப்பீடு எடுக்கும்போதே மேலே குறிப்பிட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சைகளும் அந்த திட்டத்தில் அடங்கியுள்ளதா என்பதை விசாரித்து தேர்வு செய்வது நல்லது.

மகப்பேறு நன்மைகள்:

பெண்களுக்கான முக்கியமான மருத்துவச் செலவுகளில் மகப்பேறு செலவும் ஒன்று. இன்றைய காலத்தில் மகப்பேறு செலவு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. எனவே நீங்கள் தேர்வு செய்யும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மகப்பேறு செலவுகளும் அடங்கியுள்ளதா என்று கவனிக்க வேண்டும். பிறந்த குழந்தையின் அத்தியாவசிய செலவுகளான தடுப்பூசி போன்றவற்றையும் உள்ளடக்கிய மகப்பேறு காப்பீட்டு திட்டமாக இருந்தால் கூடுதல் சிறப்பு.

உங்களது மருத்துவ தேவைகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்ற காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்யும் காப்பீட்டு திட்டமானது நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் உங்களது இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும் மருத்துவமனைகள் ஆகியவற்றில் செல்லுமா? அந்த திட்டத்திற்கு வரி விலக்கு உள்ளதா என்பதையும் அவசியம் கவனிக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்