கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில்

கட்டாரி மங்கலம் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.;

Update:2025-03-25 12:38 IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது பேய்குளம் கிராமம். இது முற்காலத்தில் பெரும் காடாக இருந்தது. இந்த வழியாக வரும் வழிப்போக்கர்கள் இவ்விடத்தில் தங்கவே அஞ்சி நடுங்கினர். தற்போது பேய்குளம் பஜார் இருக்கும் இடம், இருண்ட காடாகவும், நுழைய முடியாத அளவுக்கு நெருக்கமான அதிக மரங்கள் கொண்ட இடங்களாகவும் இருந்தது. இதனால் மதிய வேளையில்கூட இவ்விடம் இருண்டு, பேய் குடிகொண்டிருக்கும் இடமாக தோன்றிய காரணத்தினால் 'பேய்குளம்' என பெயர் பெற்றது.

இந்தப் பகுதியில் நடராஜரின் பஞ்ச விக்ரக தலங்களில் ஒரு தலமான கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில் (அழகிய கூத்தர் கோவில்) உள்ளது. இந்தக் கோவிலைக் கட்டிய வீர பாண்டியன் என்ற மன்னன், ஆலயத்தை கட்டி முடித்ததும் கொடிமரம் நடுவதற்காக யாகம் ஒன்றை செய்தான். அப்போது வேதவிற்பன்னர்கள், ஐந்து தேவதைகளை அழைத்து கொடிமரத்தில் அமர வைத்தனர். ஊர்மக்கள் கூடி கொடிமரத்தை கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

அப்போது 'எங்கள் ஊருக்கு காவல் தெய்வமாக இந்த தேவதைகளும் இடம்பெற வேண்டும்' என்று பக்கத்து ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு அவர்கள் அந்த தேவதைகளை அழைத்துப் போய் தங்கள் ஊர்களில் காவல் தெய்வமாக குடி வைத்துக்கொண்டார்களாம்.

கட்டாரிமங்கலம், அம்பலச்சேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்குளம் ஆகிய ஐந்து கிராமங்களில்தான் அந்த தேவதைகள் குடிபுகுந்தன. பேய்குளம் தேவதை குடிகொண்ட இடமாக மாறிய காரணத்தினால் இவ்வூர் காடு அழிந்து நகரமாக மாறிவிட்டது.

திருச்செந்தூர் சென்று வழிபடும் பக்தர்கள், அக்காலங்களில் பாத யாத்திரையாக செல்வார்கள். எனவே அவர்கள் தங்குவதற்காக வழி நெடுகிலும் அன்னதான சத்திரங்கள் அமைத்தனர். பொதிகை மலை அடிவாரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாத யாத்திரீகர்கள் தங்குவதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்த்தாண்டன் என்ற ஒரு சிவ பக்தர் இந்தப் பகுதியில் ஒரு மடம் அமைத்தார். அந்த மடத்தில் சில பசுக்களையும் பராமரித்து வந்தனர். அதனால் இந்த மடம் 'பசு மடம்' என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் இங்கு வந்து தங்கிய சிவனடியார்களில் ஒருவர் இங்கு சிவபூஜை செய்து வந்தார். ஆண்டுதோறும் ஆடித் தபசு காட்சியை காண சங்கரன்கோவில் சென்று வருவார். வயதான காரணத்தினால் அவரால் சங்கரன் கோவில் செல்ல இயலவில்லை. அதனால் மிகுந்த வருத்தத்தில் சங்கரலிங்க சுவாமியையும், கோமதி அம்மாளையும் நினைத்து சிவசிந்தனையில் அமர்ந்து தியானம் செய்தார்.

அதன் பலனாக சங்கரன்கோவிலில் நடந்த தவசுக் காட்சியானது இவ்வூரில் இருந்த அவருக்கு தெரிந்தது. இதனால் ஆனந்தம் அடைந்தார். 'தென்னகத்தில் இறைவன் தபசு காட்சி தந்த இந்த இடம் அல்லவா சின்ன சங்கரன்கோவில்' என்று எண்ணினார். இறைவனிடம் 'தனக்கு காட்சி தந்தது போலவே, இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காட்சி தரவேண்டும்' என்று கோரினார். இறைவனும் 'அவ்வாறே ஆகட்டும்' எனக் கூறி மறைந்தார்.

 

இதையடுத்து அந்த சிவனடியார், இங்கு சுவாமி மற்றும் அம்பாளை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தோறும் இங்கும் ஆடி தபசு காட்சி மிகச்சிறப்பாக நடைபெற வழி ஏற்படுத்தினார். சங்கரன்கோயில் சென்று தபசுக் காட்சி காண முடியாத பக்தர்கள். இங்கேயே ஆடித் தபசு காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.

அதன்பின் இந்த ஆலயத்தை வழிபட்ட சில பக்தர்கள். காசி விஸ்வநாதரைப் போன்று சிறிய லிங்கத்தையும் சிவஆகம விதிப்படி இங்கே பிரதிஷ்டை செய்தனர். ஆலயத்தையும் சிறப்பான முறையில் அமைத்து கருவறையில் கிழக்கு நோக்கி சங்கரலிங்க சுவாமியையும், அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி கோமதி அம்பாளையும் அமைத்தனர். இந்த மண்டபத்தில் நடராஜப் பெருமான், சிவகாமி அம்பாள், ஐம்பொன்னால் ஆன மாணிக்கவாசகர், அதிகார நந்தி உள்ளது.

 

முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், துர்க்கை அம்மன் மற்றும் பைரவர் போன்ற பரிகார தேவதைகளும் உள்ளனர். ஆலய பிரகாரத்தில் வேம்பு உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனடியில் புற்று மற்றும் சாஸ்தா சன்னிதி இருக்கிறது. இவ்விடத்தில் நாகங்களுக்கு பால் - பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோவிலின் தல விருட்சம், வில்வ மரம் ஆகும்.

ஆடித் தபசு விழா

இந்தக் கோவில் இருக்கிற இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டகப்படியும் அருகில் உள்ள ஊர்களுக்கு வழங்கப்படும். குருகல்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், தேர்க்கன் குளம், வீராக்குளம், ஸ்ரீவெங்கடேசபுரம், பழனியப்பபுரம், கோமநேரி, சங்கரநயினார்புரம், மீரான்குளம் ஊர் பொதுமக்கள் இந்த மண்டகப்படியை நடத்தி வருகிறார்கள்.

பேய்குளம் ஊரின் மேல்புறம் உள்ள பிள்ளையார் கோவிலில் அம்மன் தபசு இருப்பார். இதையொட்டி அம்மன் காலை 10.15-க்கு தபசுக்கு புறப்படுவார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சீர்வரிசையுடன் அம்பாளை அழைக்க புறப்படுவார். அம்பாளை அழைத்துக் கொண்டு வரும் சுவாமிக்கு, பேய்குளம் பஜாரில் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள். அப்போது அப்பகுதியில் விளையும் கடலை, உளுந்து, பருத்தி போன்ற விளை பொருட்களை சந்தோஷமாக வீசி மகிழ்வார்கள். இதனால் அடுத்த ஆண்டு விளைச்சல் மிக அதிகமாகும் என விவசாயிகள் நம்புகின்றனர்.

இரவு 8.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. அன்றைய தினம் பெண்கள் மாவிளக்கேற்றி சிறப்பாக வழிபாடு செய்கிறார்கள். இத்திருக்கோவிலில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

நாங்குநேரியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பேய்குளம் உள்ளது. திருநெல்வேலி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் இருந்து பல் வசதி உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்