சிவன் கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற அன்னாபிஷேகம்

அன்னாபிஷேக நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.;

Update:2025-11-05 16:09 IST

கிருஷ்ணகிரி சோமேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று சிவலிங்கத்துக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்கள் பூர்வ ஜென்ம பாவம், வறுமை நீங்கி எல்லா வளமும் பெறலாம் என்பது ஜதீகம். அவ்வகையில் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரர் கோவில், பழையபேட்டை சோமேஸ்வரர் கோவில், புதுப்பேட்டை ராசுவீதி பிரசன்ன பார்வதி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவில் என மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தரகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதிய வீட்டுவசதி வாரியம் பகுதி 2-ல் உள்ள விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் சிவன் பாடலை பாடி வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

 

சிவகாசி சிவன் கோவில், திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி கோவில், மாரனேரி ராஜலிங்க பூமிநாத சுவாமி கோவில் ஆகிய திருத்தலங்களில் நடைபெற்ற அன்னாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

பழனி பகுதியில் உள்ள கோவில்களிலும் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அ.கலையம்புத்தூர் கைலாசநாதர்-கல்யாணி அம்மன் கோவிலில் சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் பழனி ரணகாளியம்மன் கோவில், கூனகாளியம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

 

அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் அந்தியூர் பெரிய ஏரிக்கரையில் அமைந்துள்ளது விசாலாட்சி அம்பாள் காசி விசுவநாதர் ஆலயம். இங்கு ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பச்சரிசி சாதம், காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டன. அந்தியூர், தவிட்டுப்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி மற்றும் வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர், சிவபெருமானுக்கு சாதம், காய்கனிகள், பழ வகைகள் சாத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அன்னாபிசேக வழிபாடு நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் காலையில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 11 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்