ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழா- பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

பொங்கல் வைப்பதற்காக நேற்றே நகர பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் அடுப்பு அமைத்து இடம் பிடித்து வைத்திருந்தனர்.;

Update:2025-03-13 19:41 IST

திருவனந்தபுரத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்காலை விழா (பொங்கல் விழா) நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டி குடடியிருத்தல் சடங்குடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு இன்று நடைபெற்றது.

முதலில் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது. தந்திரி பிரம்பஸ்ரீ பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டதிரிபாடு, மேல் சாந்தி பிரம்ம ஸ்ரீ முரளிதரன நம்பூதிரி ஆகியோர் தீயை மூட்டி விழாவை தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் முன்புள்ள மைதானம், கோவிலின் சுற்றுப்புற பகுதிகள் மற்றும் திருவனந்தபுரம் நகர் முழுவதும் முக்கிய சாலைகளில் லட்சக்கணக்கான பெண்கள் அடுப்பு மூட்டி பொங்கலிட்டனர். இதற்காக நேற்றே நகர பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் அடுப்பு அமைத்து இடம் பிடித்து வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியால் திருவனந்தபுரம் நகரம் விழா கோலம் பூண்டது.

இந்த விழாவுக்காக திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு ஒருநாள் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்