மனிதனின் உயர்வு தாழ்வை உறுதி செய்யும் 'குணம்'

நன்றி மறந்த கௌதமன், தனக்கு உதவி செய்த கொக்கை நெருப்பில் போட்டு சுட்டு அந்த மாமிசத்தை சாப்பிடுவதற்காக எடுத்துச்சென்றான்.;

Update:2025-09-18 18:01 IST

மகாபாரதத்தில் சாந்தி பருவத்தில் விருந்தோம்பல் மற்றும் நற்குணம் பற்றிய ஒரு கதை உள்ளது.

ஒரு ஊரில் பெரிய பண்டிதர் இருந்தார். அவரைப் பார்த்தாலே ஊர் மக்கள் கைதொழுவர். அவருக்கு கௌதமன் என்ற மகன். கூடா நட்பால் அனைத்து கெட்ட எண்ணங்களையும் பெற்றிருப்பவன். தந்தை உருவாக்கிய சொத்து அனைத்தையும், பெண் சகவாசம், போதை என்று கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வந்தான். கௌதமனை பற்றிய கவலையிலேயே அவன் தந்தை இறந்து போனார். இப்போது தினசரி உணவுக்கு போராடும் நிலைக்கு கௌதமன் தள்ளப்பட்டான்.

தன் வாழ்க்கையை நடத்த வன விலங்குகளை வேட்டையாடி உண்டும், விற்றும் வாழ்ந்தான். ஒரு நாள் காட்டில் வேட்டையாடியபோது ஒரு முனிவர் வந்து, ‘இதுபோல் பிற உயிர்களை கொல்வது முறையல்ல. நல்ல வழியில் செல்' என்று கூறிச் சென்றார்.

இதனால் மனம் கலங்கிய அவன் ஒரு பெரிய மரத்தடியில் படுத்து தூங்கினான். திடீரென்று கண் விழித்தபோது, அவன் அருகே ஒரு கொக்கு அமர்ந்திருந்தது. அது அவனுக்கு தன் இறகுகளால் காற்று வீசிக்கொண்டிருந்தது.

திடுக்கிட்டு எழுந்த கௌதமனிடம். "ஐயா.. என் பெயர் ராஜசிம்மா. இந்த மரம் என்னுடைய தங்கும் இடம். அப்படியானால் என் வீட்டிற்கு வந்த நீங்கள் என் விருந்தினர். நீங்கள் இங்கே படுத்திருந்தபோது. உங்கள் மீது வியர்வை அரும்பியிருந்தது. அதனால்தான் காற்று வீசிக் கொண்டிருந்தேன். நீங்கள் என்ன விஷயமாக இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டது.

அந்த கொக்கின் நற்பண்பைப் பார்த்து கௌதமன் மகிழ்ந்தான். பின்னர், "நான் மிகுந்த வறுமையில் இருக்கிறேன். தினசரி வாழ்க்கையை நடத்துவதே பெரிய விஷயமாக உள்ளது" என்றான்.

அப்போது அந்த கொக்கு, “எனக்கு தெரிந்த நண்பர் இருக்கிறார். அவர் பெயர் விரூபாட்சன். அவர் அசுர குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பிறக்கு உதவுவதில் அவருக்கு நிகர் எவருமில்லை. நீங்கள் அவரிடம் சென்று என்னுடைய நண்பர் என்று கூறுங்கள். உங்களுக்கு தேவையான உதவியை அவர் செய்வார்" என்று சொன்னது.

அதன்படியே விரூபாட்சனிடம் சென்றான் கௌதமன். கொக்கு அனுப்பியதால் வந்தவன் என்றதும் ராஜ உபசாரம் செய்த விரூபாட்சன், அவனுக்கு தேவையான பொன், பொருட்களை அளவுக்கு அதிகமாகவே கொடுத்து அனுப்பினான். அவற்றைப் பெற்றுக் கொண்ட கௌதமன், மீண்டும் வந்த வழியே திரும்பினான். அப்போது இருள் சூழத் தொடங்கிவிட்டதால், மீண்டும் வனத்தில் கொக்கு தங்கியிருந்து இடத்திற்கே வந்தான். கொக்கை சந்தித்து, விரூபாட்சனிடம் போதிய உதவியை பெற்றுவிட்டதாக கூறி மகிழ்ந்தான்.

அதைக் கேட்டு மகிழ்ந்த கொக்கு, இரவாகி விட்டதால் இங்கேயே தங்கியிருந்து நாளை காலை ஊருக்கு செல்லும்படி கௌதமனிடம் கேட்டுக் கொண்டது. அவனுக்காக தன்னுடைய உதிர்ந்த இறகுகளை சேகரித்து, பஞ்சு போன்ற படுக்கையை உருவாக்கிக் கொடுத்தது. குளிர் தெரியாமல் இருப்பதற்காக நெருப்பு மூட்டிக் கொடுத்தது. பின் கௌதமனுக்கு அருகிலேயே தானும் படுத்து தூங்கியது. தூங்கிக் கொண்டிருந்தபோது இடையில் தூக்கம் களைந்து எழுந்தான், கௌதமன். அவனுக்கு அங்கே எரிந்த நெருப்பும், அதன் அருகே தூங்கிக்கொண்டிருந்த கொக்கும் தென்பட்டது. இப்போது அவன் மனதில் மீண்டும் மிருகம் வந்து அமர்ந்தது. நாம் நாளை ஊர் சென்று சேர எப்படியும் வெகுநேரம் ஆகிவிடும். அதுவரை உணவு வேண்டுமே' என்று நினைத்தவன், அந்த கொக்கை தூக்கி நெருப்பில் போட்டு, அந்த மாமிசத்தை எடுத்துக் கொண்டு ஊர் புறப்பட்டான்.

இந்த நிலையில் தினமும் ஒரு முறையாவது தன்னை வந்து சந்திக்கும் கொக்கு, மூன்று நாட்களாக வராததை எண்ணி விரூபாட்சன் வருத்தினான். கொக்கின் இருப்பிடம் சென்று நிலவரம் அறிந்துவர தன் காவலர்களை அனுப்பினான், ஆனால் அவர்கள், அங்கே தென்பட்ட ராஜசிம்மா கொக்கின் சில உடல் பாகங்களைத் தான் கொண்டு வந்தனர். உண்மையை உணர்ந்துகொண்ட விரூபாட்சன், கௌதமனை பிடித்து வரும்படி உத்தரவிட்டான்.

அதன்படியே அவனை காவலர்கள் பிடித்து வந்தனர். விரூபாட்சன் தன்னுடன் நட்பாக இருந்த கொக்கை கொன்ற கௌதமனை துண்டு துண்டாக வெட்டி வனத்தில் வீசினான். ஆனால் அங்குள்ள விலங்குகள், ‘இந்தப் பாவியின் உடலை எங்களால் உண்ண முடியாது' என்று விலகிச் சென்றன. இதை தேவலோகத்தில் இருந்து பார்த்த தேவேந்திரன் அங்கு வந்து, இறந்த கொக்கை மீண்டும் உயிர்ப்பித்தார். அதைக் கண்டு விரூபாட்சன் மகிழ்ந்தான். மேலும் கொக்கிடம், "என்ன வரம் வேண்டும்?” என்று தேவேந்திரன் கேட்க, அதற்கு அந்த கொக்கு,"என்னுடைய விருந்தினராக வந்த கௌதமனையும் உயிர்ப்பிக்க வேண்டும்" என்று கேட்டது. அதன்படியே அவனையும் தேவேந்திரன் உயிர்ப்பித்தார். தன் நடத்தையை எண்ணி கௌதமன் தலைகுனிந்தான்.

ஒருவரின் குலம் எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் குணத்தால்தான் அவர்கள் உயர்ந்தவர்களா? தாழ்ந்தவர்களா? என்பதை அறிய முடியும் என்பதாக அமைந்த கதை இது. இதைத்தான் திருவள்ளுவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்