கண்ணகி கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மலைப்பகுதியில் உள்ள கோவில் சுத்தம் செய்யப்பட்டு, வாழை மரங்களால் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது.;

Update:2025-05-13 11:29 IST


தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் இக்கோவில் இருக்கிறது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகியான கற்புக்கரசி கண்ணகிக்கு, சேர மன்னன் சேரன் செங்குட்டுவனால் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,380 அடி உயரத்தில் இக்கோவில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

சித்ரா பௌர்ணமி திருவிழா

கண்ணகி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி திருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழா நாளில் மட்டுமே பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதற்காக மலைப்பகுதியில் உள்ள கோவில் சுத்தம் செய்யப்பட்டு, வாழை மரங்களால் தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மங்கலதேவி கண்ணகிக்கு மாம்பழ நிறத்தில் பட்டு அணிவித்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய கேரள மாநிலம் குமுளியில் இருந்து தேக்கடி வழியாக ஜீப்களிலும், கூடலூர் அருகே பளியன்குடியில் இருந்து மலைப்பாதை வழியாக நடந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். சில பக்தர்கள் ஊன்றுகோலை ஊன்றியபடி மலைப்பாதையில் நடந்து வந்ததையும் பார்க்க முடிந்தது.

2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

இதேபோல் குமுளியில் இருந்தும் பக்தர்கள் நடந்து வந்தனர். பக்தர்களுக்காக குமுளியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஜீப்கள் இயக்கப்பட்டன. ஆபத்தான மலைப்பாதை வழியாக ஜீப்கள் மெல்ல நகர்ந்து சென்றன. இரு மாநிலங்களையும் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கூட்டம் அலைமோதியதால் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 மணி நேரம் வரை ஆனது. பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், எலுமிச்சை பழம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

மேலும், கோவில் வளாகத்தில் தமிழக மற்றும் கேரள மாநில பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். குமுளியில் இருந்து காலை 6 மணியில் இருந்து பகல் 2 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்