விடுமுறை நாளையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சனீஸ்வர பகவானுக்கு உகந்த எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.;
காரைக்கால்,
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். சனிக்கிழமைகளில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
அந்த வகையில், தற்போது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்து வருகின்றனர். அவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சனீஸ்வர பகவானுக்கு விசேஷ அபிஷேகம், மகா தீபாராதனை இன்று காலை நடைபெற்றது. சனிபகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு உகந்த எள் தீபம் ஏற்றியும், அன்னதானம் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அதிக அளவிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.