சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு நாளை மட்டும் அனுமதி
நாளை இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.;
சபரிமலை,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக 2025ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஜனவரி 14ம் தேதி, மகரசங்கராந்தி தினத்தன்று மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது.
மகரஜோதி உற்சவத்தை முன்னிட்டு இன்று 30,000 பேருக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நாளை இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பின்னர் நடை அடைக்கப்பட உள்ளது.