ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

27-ந்தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.;

Update:2025-07-20 05:19 IST

ராமேசுவரம்,

பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருக்கல்யாண திருவிழா, மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடித்திருக்கல்யாண திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி அம்பாள் சன்னதி மண்டப கொடிமரத்திற்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமண்டபம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

விழாவின் 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு மேல் அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்கிறார்.

நாளை, இரவு 8 மணிக்கு அம்பாள் தங்க கேடயத்திலும், 22-ந்தேதி தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆடி அமாவாசையான 24-ந்தேதி பகல் 11 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ராமபிரான் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

25-ந்தேதி இரவு வெள்ளி தேரோட்டமும், 9-ம் நாள் விழாவான 27-ந்தேதி காலை 10 மணிக்கு முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது.

29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

4-ந்தேதி கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள், பெருமாள் தங்க கேடயங்களில் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா தொடங்கியதை முன்னிட்டு கோவிலின் 4 கோபுரங்களுக்கும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்