வற்றாத இயற்கை நீரூற்றுடன் கமண்டல கணபதி கோவில்

கமண்டல கணபதி கோவிலில் உற்பத்தியாகும் புனித நீரில் குளித்தால் சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.;

Update:2025-06-16 17:14 IST

கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இங்கிருந்து 23 கிலேரா மீட்டர் தொலைவில் உள்ள 'கேசவே' என்ற கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான பகுதியில் 'கமண்டல கணபதி திருக்கோவில்' இருக்கிறது.

உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருப்பது நீர். அந்த நீர் தொடர்ந்து சுரந்துகொண்டே இருக்கும் ஆலயமாக இந்த கமண்டல கணபதி கோவில் திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில், விநாயகர் விக்கிரகத்தின் முன்பாக உள்ள ஒரு சிறிய துளையில் இருந்து தண்ணீர் பொங்கி வந்தபடியே இருக்கிறது. இந்த இயற்கை நீரூற்றானது இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்த சுனையில் இருந்து சில நேரங்களில் பொங்கியும், சில நேரங்களில் சாதாரண அளவிலும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மழைக்காலத்தில் விநாயகரின் பாதம் வரை தண்ணீர் பொங்கி வழியும். கோடையில் சற்று குறைவாக இருக்கும்.

இந்த சுனை நீரைக் கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை புனித தீர்த்தமாக கருதி பக்தர்கள் பாட்டில்களில் பிடித்துச்செல்கின்றனர்.

இந்த நீரில் குளிப்பதால் சனி தோஷம் நீங்கும் என்றும், பள்ளிக் குழந்தைகள் இந்த புனித நீரைக் குடித்தால், அவர்களின் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. யோக முத்திரையில் எழுந்தருளியிருக்கும் விநாயகரிடம் வேண்டிக்கொண்டால் அது நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்