குருமிலாங்குடி புனித சுவக்கின் அன்னாள் ஆலய சப்பர பவனி
திருவிழா நிறைவு திருப்பலியை அருட்தந்தை சேசு தலைமையில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றியபின் சப்பர பவனி மற்றும் கொடியிறக்கம் நடைபெற்றது.;
திருவாடானை தாலுகா குருமிலாங்குடியில் புனித சுவக்கின் அன்னாள் ஆலய 103-வது ஆண்டு திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் அருட்தந்தையர்களால் நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நிகழ்த்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை அருட்தந்தை பாஸ்கர் டேவிட் தலைமையில் குருமிலாங்குடி பங்குத்தந்தை ஜேம்ஸ் ராஜா மற்றும் அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். தொடர்ந்து சிறப்பு மறையுரை நிகழ்த்தப்பட்டது. பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனிதமிக்கேல் அதிதூதர், புனித பாத்திமா மாதா, புனித சுவக்கின் அன்னாள் முக்கிய வீதிகளில் வலம் வந்து இறைமக்களுக்கு இறையாசீர் வழங்கினர்.
நேற்று நடைபெற்ற திருவிழா நிறைவு திருப்பலியை அருட்தந்தை சேசு தலைமையில் அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். பின்னர் சப்பர பவனி, கொடி இறக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் தொண்டி பங்குத்தந்தை வியாகுல அமிர்தராஜ், ஊடகப் பணி குழு செயலாளர் அருட்தந்தை அந்தோணி எட்வர்ட் ராஜ், அருட்தந்தையர்கள் பிரபு, குமார், அருட் சகோதரி கிரேசி, மரிய கொரட்டி, அல்போன்சா மற்றும் குருமிலாங்குடி பங்கு இறைமக்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். விழாவையொட்டி வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை குருமிலாங்குடி பங்குத் தந்தை ஜேம்ஸ் ராஜா தலைமையில் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.