மயிலாடுதுறை: 54 அடி உயர சிவலிங்கம் பிரதிஷ்டை விழா - பக்தி பரவசத்துடன் நடனமாடிய வெளிநாட்டு பக்தர்கள்

வேத மந்திரங்கள் முழங்க சிவலிங்கத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.;

Update:2025-05-11 15:16 IST

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி கிராமத்தில் தாருகாவனம் சித்தர் பீடம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த தளத்தில் 54 அடி நீளமும், 54 அடி உயரமும் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சிவலிங்கம், தாருகாவனம் சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிவலிங்கத்தின் பிரதிஷ்டை விழா சித்தர் பீடத்தின் நிர்வாகி தட்சிணாமூர்த்தி தலைமையில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், நவகிரக ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரானது மேளதாளங்கள், சிவவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து புனித நீரானது சிவலிங்கத்தின் உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

இதையடுத்து கருவறைக்குள் வீற்றிருக்கும் தாருகாவனேஸ்வரர் சிவலிங்கத்திற்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த பிரதிஷ்டை விழாவில் ரஷியா, கஜகஸ்தான், ஜப்பான் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கு முழங்கப்பட்ட சிவவாத்தியங்களை கேட்டு பக்தி பரவசத்துடன் நடனமாடி இறை வழிபாடு செய்தனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்