அருணாப்பேரி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் ஆடித் திருவிழா
மண் குதிரையில் எழுந்தருளிய சாஸ்தாவை ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் தோள்களில் சுமந்து வந்து கோவிலை அடைந்தனர்.;
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவிலின் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நேற்று காலை 9 மணி அளவில் குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மாலையில் சாஸ்தா வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. மண்ணால் செய்யப்பட்ட குதிரையின் மீது மேகம் திரை கொண்ட சாஸ்தா எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க கீழப்பாவூரில் இருந்து புறப்பட்டு வந்தார். சாஸ்தாவை பக்தர்கள் தோள்களில் சுமந்து ஊர்வலமாக அருணாபேரி கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அருணாப்பேரியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் பூஜை நடைபெற்ற பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
வழி நெடுகிலும் பக்தர்கள் சாஸ்தாவிற்கு மலர் மாலைகள் மற்றும் எலுமிச்சை மாலைகளை அணிவித்து தரிசனம் செய்தனர். மண் குதிரையில் எழுந்தருளிய சாஸ்தாவை ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் தோள்களில் சுமந்து வந்த நிலையில், கோவிலை வந்தடைந்ததும் சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வில்லிசையுடன் உச்சி கால சிறப்பு பூஜையும் அதிகாலையில் பொங்கல் வைக்கும் வைபவமும், அதனைத் தொடர்ந்து கிடா வெட்டு நிகழ்வும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.