மெலட்டூர் சித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாண வைபவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.;

Update:2025-08-24 13:56 IST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும்  சித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் அருளக்கூடியவர். இங்கு சித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில், திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு  தெட்சணாமூர்த்தி விநாயகரை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இவ்வாறு ஆன்மிக சிறப்பு பெற்ற மெலட்டூர் சித்தி புத்தி தட்சணாமூர்த்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-வதுநாள் நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு காலை சுவாமி தெட்சணாமூர்த்தி, சித்தி, புத்தியுடன் கோவில் சன்னதியில் இருந்து புறப்பட்டு, வீதிகள் வழியாக வந்து கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தல் திருமண மேடையை அடைந்தார். சுவாமியுடன் பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பூலம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் திருமண மண்டபத்தில் அக்னி ஹோமம் வார்க்கப்பட்டு சகல சடங்கு, சம்பிரதாயங்கள்படி வேத மந்திரங்கள், மங்கள் வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு அம்பாள் சித்திலெட்சுமி, புத்திலெட்சுமியுடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

திருக்கல்யாண வைபவத்தில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த, திருமணமாகாத பெண்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்