கார்த்திகை பிரம்மோற்சவ விழா: சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக எழுந்தருளிய பத்மாவதி தாயார்
வாகன வீதிஉலா முன்னால் பல்வேறு கலைக் குழுக்கள் நடத்திய கலாசார நிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்தன.;
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் ‘தனலட்சுமி தேவி’ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்தார்.
வெள்ளை முத்துகளை பார்த்தால் துன்பங்களில் இருந்து நாம் விடுபடலாம், என நம்பப்படுகிறது. எனவே பக்தர்களின் துன்பத்தை போக்கவே உற்சவர் பத்மாவதி தாயார் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலா முன்னால் பல்வேறு கலைக் குழுக்கள் நடத்திய கலாசார நிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்தன. அதில் கோஷாதி நாட்டுப்புற நடனத்தில் பிரதமர் ராஷ்ட்ரிய பால் புரஷ்கார் விருது பெற்ற கவுரவ்ரெட்டி பங்கேற்றார். கோலாட்டம், பரத நாட்டியம், கோண்டு நிருத்தியம், மணிப்பூர் பாரம்பரிய நடனம் ஆகியவை நடந்தன. கேரள செண்டை மேளம், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் பத்மாவதி தாயார், யோக நரசிம்மர் திருக்கோலத்தில், உக்கிரமான சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை கற்பக விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமந்த வாகன வீதிஉலா நடக்கிறது.