இன்று வசந்த பஞ்சமி.. மஞ்சள் ஆடை அணிந்து சரஸ்வதி தேவியை வழிபடுங்கள்!

நாளை காலை வரை பஞ்சமி திதி உள்ளதால் இன்று முழுவதும் பூஜை செய்து சரஸ்வதி தேவியை வழிபடலாம்.;

Update:2025-02-02 12:06 IST

கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி அவதரித்த தினமான வசந்த பஞ்சமி இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். கோவில்களுக்கு சென்றும் சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர்.

நாளை காலை 6:52 மணி வரை பஞ்சமி திதி உள்ளது. எனவே, இன்று முழுவதும் பூஜை செய்து சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. ஆனால், ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து நல்ல நேரமாக பார்த்து பூஜை செய்வது சிறந்த பலனை தரும்.

வீட்டில் பூஜை செய்யும் முறை

சரஸ்வதி தேவியின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளவேண்டும். சரஸ்வதி தேவிக்கு மங்களகரமான மஞ்சள் நிறம் என்பது மிகவும் பிடிக்கும் என்பதால், பூஜை செய்பவர்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவரும் இன்றைய தினம் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்வது நல்லது. சரஸ்வதி தேவி படத்திற்கும் மஞ்சள் நிற மாலை சாற்றவேண்டும்.

சிலர் வீட்டில் சிறிய அளவிலான சரஸ்வதி சிலை வைத்து வழிபடும் வழக்கம் இருக்கும். அவர்கள் இன்றைய தினம் சரஸ்வதி சிலைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற மாலை மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யலாம். அதேபோல் மஞ்சள் நிற பழங்களையும் மஞ்சள் நிற இனிப்பு பொருட்களையும் சரஸ்வதி தேவிக்கு நெய்வேத்தியமாக படைக்கலாம். பிள்ளைகளின் பாடப் புத்தகத்தை எடுத்து வைத்தும் வழிபாடு செய்யலாம்.

மஞ்சள் என்பது மங்களகரமானது என்பதால்தான், பலரும் வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் உலோகம் என்றழைக்கப்படும் தங்கத்தை வாங்கி அணிகின்றனர். வசந்த பஞ்சமி நன்னாளில் தங்கம் வாங்குவது சுபமானதாகவே கருதப்படுகிறது. தங்கம் வாங்க வசதி இல்லாதவர்கள் மஞ்சள் மலர்களை வைத்து பூஜை செய்தால் போதுமானது.

வசந்த பஞ்சமி தினத்தில் மஞ்சள் நிறம் ஜொலிக்க பூஜைகள் செய்து சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதால், ஞானம் மற்றும் அறிவு சார் கலைகளில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிய முயற்சிகள், கற்றல் மற்றும் கலை முயற்சிகளை தொடங்குவதற்கு இந்த நாள் அதிர்ஷ்டமான நாளாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்