விளாத்திகுளம்: வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் "சந்தனக்கூடு" ஊர்வலம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.;
விளாத்திகுளம் அருகே உள்ள புகழ்பெற்ற வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் "சந்தனக்கூடு" ஊர்வலம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் வீட்டிலிருந்து நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தனக்கூடு புறப்பட்டு வாணவேடிக்கையுடன், தப்புதாளங்கள் முழங்க சிலம்பாட்டம் போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக சுற்றிவந்து, அதிகாலை 4.30 மணிக்கு தர்ஹாவை வந்தடைந்தது. பின் ரவுலா ஷரிபுக்கு சந்தனம் பூசப்பட்டு, பின்னர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சந்தனம் அங்குள்ள சிவன் கோவிலில் அரைத்து எடுத்து வந்து பயன்படுத்தப்பட்டது.
திருவிளக்கு பூஜையில் மத பாகுபாடின்றி, இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் என பலதரப்பட்ட மதத்தினரும் ஒற்றுமையாக கலந்துகொண்டு அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.
தமிழகத்திலேயே இந்த ஒரே ஒரு தர்ஹாவில் மட்டும் தான், இந்துக் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.