மூளையை உண்ணும் அமீபா... தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?

மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை.;

Update:2025-10-10 17:29 IST

மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி, ஒரு செல் உயிரி ஆகும். இவை பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும். அங்கு மூழ்கி குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடும். அதாவது மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று காணப்படுகிறது.

அறிகுறிகள் என்ன?

மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை. அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய ஒன்று முதல் 18 நாட்களுக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்துக்கும் வழிவகுக்கும் அபாயம் கொண்டது. உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படக்கூடும்.

இந்த அமீபா பாதிப்பை சோதனை மூலம் ஆரம்ப காலங்களில் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது. எனவே லேசான அறிகுறிகள் தென்பட்டவுடன் டாக்டர்களை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவது அவசியம்.

தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்:

* பராமரிக்கப்படாத, தண்ணீர் குறைவாக உள்ள நீச்சல் குளங்களுக்குச் செல்லக்கூடாது.

* குளோரின் எனும் கிருமி நாசினி மூலம் நீச்சல் குளங்கள் முறையாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்த்து செல்ல வேண்டும்.

* மாசடைந்த குளம் மற்றும் ஏரிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

* இந்த அமீபா மூக்கு மூலமே உடலுக்கு செல்கிறது என்பதால் குதித்து மூழ்குவது, டைவ் அடிப்பது போன்ற செயல்களை தவிர்க்கலாம். மூக்கினுள் தண்ணீர் புகாதபடி பாதுகாப்பாக குளிப்பதன் மூலம் இந்த தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்