சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளால் கிட்னி பாதிக்குமா?

தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுவதால் அதன் காரணமாக சிறுநீரகம் பாதிக்குமோ? என்ற பயம் சிலருக்கு ஏற்படுகிறது.;

Update:2025-01-23 15:42 IST

சர்க்கரை நோயாளிகளில் பலருக்கு சிறுநீரக பாதிப்பு (கிட்னி பாதிப்பு) ஏற்படுவதை கேள்விப்படுகிறோம். இதனை டயாபடிக் நெப்ரோபதி அல்லது நீரிழிவு சிறுநீரகநோய் (DKD)என்று அழைக்கின்றனர். அதிக ரத்த சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் அளவு, புகைப்பழக்கம் அல்லது மதுப்பழக்கம், உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக்கொள்வது, உடல் பருமன் உள்ளிட்ட சில காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், சர்க்கரை நோய் பல ஆண்டுகளாக இருந்தால் சிறுநீரக பாதிப்பும் கூடவே வந்துவிடுமோ என சிலர் பயப்படுவதுண்டு. தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுவதால் அதன் காரணமாக சிறுநீரகம் பாதிக்குமோ? என்ற பயமும் சிலருக்கு ஏற்படுகிறது.

ஆனால், சர்க்கரை நோய்க்கு மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று சரியான டோஸ் எடுத்துக்கொண்டால் அந்த மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது.

ஒரு வேளை நீரிழிவு நோயாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருந்தால், மருத்துவர் அதற்கு ஏற்ப சர்க்கரை மாத்திரைகளின் டோஸையோ அல்லது மாத்திரைகளையோ மாற்றலாம். சிறுநீரக பாதிப்பு இருக்கும்போது சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைப்பதற்காக சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும் சர்க்கரை மாத்திரைகள் அளவை குறைத்தோ அல்லது வேறு மாத்திரைகளையோ பரிந்துரைக்கலாம்.

மேலும் எஸ்.ஜி.எல்.டி2 இன்ஹிபிட்டர் மாத்திரைகள் சிறுநீரக பிரச்சனையை மேலும் மோசமடையாமல் தடுக்கிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளில் ஒருசிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்படும். இதை வைத்தும் சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறியாக இருக்குமோ? என நினைப்பதுண்டு. வயிற்றுப்புண்(கேஸ்ட்ரைட்டிஸ்), நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய இரைப்பை வாதம்(கேஸ்ட்ரோபெரிஸிஸ்) அசிடிட்டி, அமிலப் பின்னோட்ட நோய் ( ரிப்லக்ஸ்) போன்றவை காரணமாக வயிற்று எரிச்சல் ஏற்படலாம். வயிறு எரிச்சல் உள்ளவர்கள், ஏற்கனவே மெட்பார்மின் மாத்திரைகள் உட்கொள்பவராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று மெட்பார்மின் மாத்திரையின் டோஸை குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதற்கு பதிலாக வேறு மாத்திரை மாற்றிக் கொள்ளலாம்.

 

Tags:    

மேலும் செய்திகள்