சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல் சரியாக எளிய வழிமுறைகள்

மலச்சிக்கல் இருப்பவர்கள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்ல பலன் அளிக்கும்.;

Update:2025-10-30 12:41 IST

வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழித்தாலோ அல்லது மலம் சிரமத்துடன், வலியுடன் மற்றும் உலர்ந்து வெளியேறினாலோ அது மலச்சிக்கல் என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 16 சதவீதம் முதல் 60 சதவீதம் பேர் வரை மலச்சிக்கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மலச்சிக்கல் ஆண்களை விட பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.

கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் செல்களுக்கு ஏற்படும் சேதம், நீரிழப்பு, உட்கொள்ளும் சர்க்கரை மாத்திரைகள் அல்லது வேறு மாத்திரைகளின் பக்க விளைவுகள், வயது முதிர்வு, மன அழுத்தம், கூடுதலாக உள்ள தைராய்டு ஹார்மோன் குறைபாடு, கர்ப்ப காலம், வேறு நோய்களின் கூடுதல் பாதிப்பு, எப்போதுமே உட்கார்ந்த நிலையில் வேலை செய்தல் போன்ற காரணங்களால் சர்க்கரை நோயாளிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வாக சர்க்கரை நோயாளிகள் கீழ்க்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.

1) அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் (கொய்யா பழம், பாகற்காய், பப்பாளி, வெள்ளரிக்காய், செவ்வாழை, வாழைக்காய், முழு தானியங்கள்)

2) தினமும் குறைந்தபட்சம் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

3) தினசரி உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்ய வேண்டும்.

4) ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

5) தினமும் காலையில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும், மலம் வரும்போது அதனை அடக்காமல் உடனே கழிப்பறைக்கு சென்று மலம் கழிக்கவேண்டும்.

6) தினமும் ஒரே நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளவேண்டும்.

7) பதப்படுத்தப்பட்ட உணவுகளை (மைதா) தவிர்க்கவேண்டும்.

8) கால்சியம் நிறைந்த உணவுகளை (பால், கேழ்வரகு) தவிர்ப்பது நல்லது.

இவை அனைத்தும் பலன் தராவிட்டால் மருத்துவரை கலந்தாலோசித்து மென்மைப்படுத்திகள் அல்லது மலமிளக்கிகளை பயன்படுத்தலாம்.

-டாக்டர் வி.சத்தியநாராயணன்

Tags:    

மேலும் செய்திகள்