ஒரே ஆண்டில் சவரனுக்கு ரூ.25 ஆயிரம் உயர்ந்த தங்கம் விலை.. மேலும் அதிகரிக்குமா..?
தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து, இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து கொண்டே இருக்கிறது.;
சென்னை,
'தங்கம்..' எத்தனையோ உலோகங்களில் இதுவும் ஒன்று என்றாலும், இதற்கு இருக்கும் மதிப்பே தனிதான். பெண்களின் மனம் கவர்ந்ததாலோ என்னவோ, அதன் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
1920-ம் ஆண்டு ரூ.21-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று (செப்டம்பர் 11ம் தேதி ) புதிய உச்சத்துடன் ரூ.81,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.10,150 ஆக விற்பனை ஆகி வருகிறது.
இதன்படி இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்., 24-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.56 ஆயிரமாக இருந்தநிலையில், இன்று (செப்., 11) ஒரு சவரன் தங்கம் ரூ. 81,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தங்கம் விலை ஒரே ஆண்டில் சவரனுக்கு ரூ.25 ஆயிரம் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது.
தங்கம் விலை 2025ம் ஆண்டில் மட்டும் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச நிபுணர்களின் கூற்றுப்படி, இதே வேகத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தால், 2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை ரூ.1,25,000ஐ எட்ட வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.
மறுபுறம், உலகளாவிய வர்த்தகப் போர் மீண்டும் வெடித்தால், டாலரின் நிலை மேலும் மோசமடையும். பின்னர், நாடுகள் படிப்படியாக டாலரை நம்பியிருப்பதை குறைத்து, தங்கத்தை நோக்கி திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, தங்கம் உலகப் பொருளாதாரத்தில் உச்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
11.09.2025 ஒரு சவரன் ரூ.81,200 (இன்று)
10.09.2025 ஒரு சவரன் ரூ.81,200 (நேற்று)
09.09.2025 ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025 ஒரு சவரன் ரூ.80,480
07.09.2025 ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025 ஒரு சவரன் ரூ.80,040