விண்ணை முட்டும் விலையேற்றம்.. தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளதா..?
இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி வரலாறு படைத்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 580-க்கும், சவரன் ரூ.92 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது. இந்தநிலையில் நேற்று ரூ.245 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 825-க்கும், ரூ.1,960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது. தங்கம் விலை சீரான இடைவெளியில் புதிய உச்சத்தை எட்டி பிடித்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் தங்கம் விலை முதல்முறையாக ரூ.94 ஆயிரத்தை தாண்டி வரலாறு படைத்து இருந்தது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.197-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.206-க்கும், ரூ.9 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனையாகியது. வெள்ளி முதல்முறையாக கிலோவுக்கு ரூ.2 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வெள்ளி விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளதா..?
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை எப்போது இறங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், ‘தங்கம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த உலோகங்கள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவருகின்றன. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தையும், வெள்ளி கிலோ ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் தணிந்து, அமெரிக்கா நமது நாட்டின் மீது திணித்த வரியை திரும்ப பெற்றாலே தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர்.