சேலம்: கூட்டுறவு சங்க எழுத்து தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு
இலவச பயிற்சி வகுப்பு கோரிமேடு பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை தொடங்குகிறது.;
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் என மொத்தம் 148 காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க வருகிற 29-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நியமனத்திற்கான எழுத்து தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு கோரிமேடு பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அந்த துறையை சார்ந்த சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது. மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும், விருப்பமும் உள்ள தேர்வர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.