முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் தொடங்கியது
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.;
சென்னை,
முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1), கணினி பயிற்றுனர் (கிரேடு-1) பதவிகளில் 1,996 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் 12-ந் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை 2 லட்சத்து 20 ஆயிரத்து 412 பேர் எழுதி இருந்தார்கள். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த மாதம் (நவம்பர்) 27-ந் தேதி வெளியானது. இதில் தமிழ் தகுதித்தேர்வில் சுமார் 85 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறாமல் போனதாக தகவல்கள் வெளியாகின. அந்த தேர்வில் தகுதி மதிப்பெண் பெறாததால், மற்ற பாடத்தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது. அந்த வகையில் தகுதி பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் ஒரு இடத்துக்கு 1.25 என்ற விகிதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டு இருந்தது.
அவ்வாறு பட்டியல் வெளியிடப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னையில் அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை), நாளை மறுதினம் (திங்கட்கிழமை), 9-ந்தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ளது.