திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றபோது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.;

Update:2025-05-14 17:14 IST

கோப்புப்படம்

லக்னோ,

உத்தரப்பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பிவன்ர்-ஜலால்பூர் சாலையில் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பந்தூர் குர்த் கிராமத்தில் உள்ள ஒரு வங்கி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்தது. இதனால் அதே சாலையில் எதிரே வந்த பைக் மீது லாரி அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தைத் தொடர்ந்து லாரி டிரைவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார்.

இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பைக்கில் வந்த இருவர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அதிகாலை 12.30 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

பின்னர் இறந்தவர்கள் ராஜா (22), சத்ருகன் (27) மற்றும் அமர் (18) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் கல்பி நகரத்தில் உள்ள ராஜேபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். பிவான்ர் பகுதியில் உள்ள கரகான் கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மூவரும் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்