டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் - மேலும் ஒருவர் கைது
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, காஷ்மீரை சேர்ந்த மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் டெல்லி போலீசார் விசாரித்தனர். அப்போது பலரை அவர்கள் பிடித்து ரகசிய விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினார்கள். இவர்கள் இந்த வழக்கில் முழு விவரங்களையும் கண்டுபிடித்தனர். சம்பவத்தில் டாக்டர் உமர் என்பவர் தற்கொலை குண்டாக வெடித்து சிதறியதையும் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக உமரோடு தொடர்பில் இருந்த 8 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்திருந்தனர். இவர்கள் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக, காஷ்மீரை சேர்ந்த மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள சோபியான் பகுதியைச் சேர்ந்தவரான யாசிர் அகமது தார், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா 2023 ஆகிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்தபோது அவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் பிடித்தனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை திட்டமிட்ட சதியில் யாசிர் தார் முக்கிய பங்கு வகித்ததாக புலனாய்வு அமைப்பினர் கூறுகின்றனர். மேலும், அவர் தற்கொலை தாக்குதல் போன்ற தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக உறுதிமொழி எடுத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.