மருத்துவமனையில் தொடர் சிகிச்சை; போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? - வாடிகன் நிர்வாகம் விளக்கம்
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
ரோம்,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ந்தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகளுக்கு இடையே அவர் உணவு எடுத்துக்கொள்கிறார் என்றும் வாடிகன் தேவாலய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், போப் பிரான்சிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி போப் பெனடிக்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் கடந்த 600 ஆண்டுகளில் முதல் முறையாக தனது போப் பதவியை ராஜினாமா செய்தவர் ஆவார்.
அவரை தொடர்ந்து பதவிக்கு வந்த பிரான்சிஸ், போப் பெனடிக்ட் போல் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து வாடிகன் நிர்வாகம் சார்பில் கார்டினல் ரவாசி அளித்துள்ள விளக்கத்தில், "போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானால், அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்யலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம் போப் பிரான்சிஸ் பதவி விலகுவது குறித்து இதுவரை பரிசீலனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் வயது முதிர்வு காரணமாக நிமோனியா பாதிப்பில் முழுமையகா இருந்து மீண்டு வர அவருக்கு மேலும் சில வாரங்கள் தேவைப்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, போப் பதவி என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று நம்புவதாக போப் பிரான்சிஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.