டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: பயங்கரவாத தாக்குதலா..? வெளியான பரபரப்பு தகவல்
டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.;
புதுடெல்லி,
நேற்று (10-11-2025) மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. எதிர்பாராத இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்றிருந்தவர்களும், சாலையில் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. அப்போது சாலையில் வாகனங்களில் இருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நிலைகுலைந்து போயினர். இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்தனர். தீயணைப்பு பணி துரிதமாக நடந்தது.
இந்த பயங்கர சம்பவத்தில் 9 பேர் உடல் சிதறி இறந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 6 பேரின் உடல்கள் அடையாள காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார் வெடித்துச் சிதற காரணம் என்ன? என்று தெரியவில்லை. பேட்டரி கோளாறு களால் வெடித்ததா? அல்லது கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதா? என கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தீ அணைத்து முடிக்கப்பட்டது. அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்களும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கார் வெடிப்பு சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலையா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்த சூழலில் டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் BNS வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கார் சென்ற இடங்களில் சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதன்படி கார் சென்ற பார்க்கிங், டோல்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டி வந்தவரின் அடையாளம் தெரிந்தது. குண்டுவெடிப்பிற்கு அரை மணி நேரம் முன்னதாக சுங்கச்சாவடியை கார் கடந்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவானது. காரை ஓட்டியவர் ஒல்டு டெல்லி ரெயில் நிலையத்தில் உறவினரை இறக்கிவிட்டு விட்டு திரும்பியுள்ளார். சம்பந்தபட்ட கார் பதர்பூர் எல்லை வழியாக டெல்லியில் நுழைந்துள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக வெடிக்கும் போது காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரில் கிடைத்த சிதைந்த உடல் பாகங்களில் இருந்து ஓட்டுநரின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நிலையில் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ மாதிரி சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டிவந்த முகமது உமரின் குடும்பத்தினர் காஷ்மீரின் புல்வாமாவில் வசிக்கும் நிலையில் அவர்களிடம் காஷ்மீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரிதாபாத்தில் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கைதானவர்கள் பணியாற்றிய அதே மருத்துவமனையில் முகமது உமர் மருத்துவராக பணியாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் வெடித்த கார் புல்வாமாவை சேர்ந்த முகமது உமருக்கு விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. காரின் உரிமையாளர் குறித்து என்.ஐ.ஏ. (NIA) உடன் இணைந்து டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் முகமது உமரின் கூட்டாளிகள் சிலரை உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்ட தகவல்படி, “காலை 8 மணிக்கு அரியானா வழியாக டெல்லிக்குள் நுழைந்த கார், 3 மணிக்கு வடக்கு டெல்லியில் இருந்துள்ளது. இடைப்பட்ட 7 மணி நேரத்தில் அந்த கார் எங்கே சென்றது என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. காரை இயக்கியதாக கூறப்படும் உமர் நபி, 7 மணி நேரத்தில் யார், யாரை சந்தித்தார் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிற்பகல் 3 மணியில் இருந்து அடுத்த 3 மணி நேரத்திற்கு ஒரே இடத்தில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்கள் அதிகம் கூடுவதை உறுதி செய்வதற்காக ஒரே இடத்தில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சுமார் 3 மணிநேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார், மாலை 6.48க்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகு வெடித்துள்ளது” என்று தெரிய வந்துள்ளது.
இதனிடையே முகமது உமரின் தாய், சகோதரி காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் கார் வெடிப்பில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில் 4 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் கார் குண்டுவெடிப்புக்கு டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியானாவின் பரிதாபாத்தில் நேற்று 3,000 கிலோ வெடிபொருட்கள் சிக்கியதற்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பா? என்று தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. எரிபொருளாக பயன்படுத்தும் எண்ணெயை பயன்படுத்தியும் வெடிபொருள் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை சுற்றிலும் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டைக்கு 3 நாட்கள் தொல்லியல் துறை விடுமுறை அறிவித்துள்ளது.