டெல்லி கார் வெடிப்பு: காஷ்மீர் டாக்டரை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் போலீசார்

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.;

Update:2025-11-14 12:41 IST

புதுடெல்லி,

டெல்லியில் மக்கள் அதிகம் கூடும் செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற தற்கொலைப்படை பயங்கரவாதி எனடி.என்.ஏ. பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதில் காஷ்மீரில் இருந்து கைது செய்யப்பட்ட டாக்டர் அதீலும் ஒருவர். இவரது சகோதரர் டாக்டர் முசாபரும் இந்த குழுவின் முக்கிய நபராக கருதப்படுகிறார்.

துருக்கியில் கடந்த 2021-ம் ஆண்டு டாக்டர் முசம்மில், உமர் (கார் வெடிப்பை நிகழ்த்தியவர்) ஆகியோருடன் டாக்டர் முசாபரும் சேர்ந்துதான் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். காஷ்மீரை சேர்ந்தவரான டாக்டர் முசாபர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து வெளிநாடுகளில் இருப்பது தெரிய வந்துள்ளது. முதலில் துபாய் சென்றிருந்த அவர் தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என கருதப்படுகிறது.

கார் வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை காஷ்மீர் போலீசார் நாடியுள்ளனர். அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டு விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்