பிலிப்பைன்ஸ் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா- பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவுக்கும் பிலிப்பைன்ஸ்க்கும் இடையே 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின.;
டெல்லி,
பிலிப்பைன்ஸ் குடியரசின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் 8-ந் தேதி வரை பல இடங்களுக்கு செல்கிறார்.அதிபருடன் அவருடைய மனைவி லூயிஸ் அரனெட்டா மார்கோஸ் மற்றும் பிலிப்பைன்சின் பல மந்திரிகள், உயர்மட்ட அதிகாரிகள் குழுவினரும் வந்தனர்.பிலிப்பைன்ஸ் அதிபருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையின் முன்புறத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். முன்னதாக மார்கோஸ், மகாத்மா காந்திக்கு மலரஞ்சலி செலுத்த ராஜ்காட்டுக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கும், பிலிப்பைன்ஸ் அதிபருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு, தலைவர்கள் இருதரப்பு ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். பிரதமர் மோடி அளித்த மதிய விருந்தில் மார்கோஸ் கலந்து கொண்டார். பின்னர் அவர் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரையும் சந்தித்தார்.
பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் கூறியதாவது:-"இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவுச்சலுகைகளை பிலிப்பைன்ஸ் அறிமுகப்படுத்தியதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்திய சுற்றுலாப் பயணிகள் பிலிப்பைன்சுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.
இந்த ஆண்டு அக்டோபர் முதல் நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம், மேலும் அத்தகைய நேரடி விமான இணைப்பை நிலைநிறுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை இந்த சந்திப்பில் புதுப்பித்துக் கொண்டோம்,இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்த ஆண்டு, இந்தியாவும், பிலிப்பைன்சும் ராஜதந்திர உறவுகளின் 75 ஆண்டுகளை கொண்டாடுகின்றன. இந்த சூழலில், அவர்களது வருகை முக்கியத்துவம் வாய்ந்தது. ராஜதந்திர உறவுகள் சமீபத்தியவை என்றாலும், நாகரிக தொடர்பு ராமாயண காலத்தில் இருந்தே உள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு வழங்கும் பிலிப்பைன்சின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதையொட்டி, பிலிப்பைன்சில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச மின்-விசா வசதியை விரிவுபடுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் டெல்லிக்கும், மணிலாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.அடுத்த ஆண்டு, பிலிப்பைன்ஸ் ஆசியானின் தலைமை பொறுப்பை ஏற்கும். அதன் வெற்றிக்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.