இண்டிகோ தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜராக விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு
நேற்று 9-வது நாளாகவும் இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை அட்டவணைப்படி இயக்க முடியாமல் திணறியது.;
மும்பை,
புதிய பணிநேர வரையறைகளால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இண்டிகோ நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் உள்நாட்டு விமான சேவை இதுவரை நாடு கண்டிராத அளவில் பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் நெருக்கடிகளை சந்தித்தனர். விமானங்களை திறமையாக இயக்கத் தவறியதால், இண்டிகோ விமான சேவைகளை 10 சதவீதம் வரை குறைக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் நேற்று 9-வது நாளாகவும் இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை அட்டவணைப்படி இயக்க முடியாமல் திணறியது. பெங்களூரு, டெல்லி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களில் இருந்து மட்டும் சுமார் 220 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக இண்டிகோ விமான நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் கூறியிருந்த நிலையிலும் பாதிப்பு நீடித்தது.
இந்தநிலையில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்சை இன்று (வியாழக்கிழமை) தனது அலுவலகத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் விமான சேவை தொடர்புடைய அனைத்து துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஆஜராகுமாறு அவரை அறிவுறுத்தி உள்ளது.