டெல்லியில் பிரதமர் மோடியுடன் ராகுல்காந்தி திடீர் சந்திப்பு
பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 1½ மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது உள்துறை மந்திரி அமித்ஷாவும் உடன் இருந்தார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கூட்டத்தொடர் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 1½ மணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது உள்துறை மந்திரி அமித்ஷாவும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பு, தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக நடந்துள்ளது. தலைமை தேர்தல், தகவல் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையர்களை பிரதமர், ஒரு உயர்மட்ட மந்திரி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தேர்வு செய்யவேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி இவர்கள் சந்தித்து விவாதித்து உள்ளனர்.
ஏற்கனவே இருந்த தலைமை தகவல் ஆணையர் ஹிராலால் சமாரியாக கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது 2 ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். உறுப்பினர்கள் பதவியிடமும் காலியாக உள்ளது. இதுகுறித்த ஆலோசனை பிரதமர் தலைமையில் நடந்துள்ளது. இந்த ஆலோசனையில் ராகுல்காந்தி ஆட்சேபங்களை தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.