எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும்: சுப்ரீம் கோர்ட்டு
புதிய மனுக்களை இனி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.;
புதுடெல்லி,
பீகாரில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், அங்கு முன்னதாக எஸ்.ஐ.ஆர்., பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, 'இந்தியா' கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இருந்து தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடக்கும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மனுக்களை அரசியல் கட்சியினர், தனி நபர்கள் மற்றும் சமூக அமைப்பினர் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் வழக்கில் ஜனவரி இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய மனுக்களை இனி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.