மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்... செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைப்பு
மாணவியை ஆசிரியர் அடிவயிற்றில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் அரசு உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சவனூரை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்தநிலையில் அந்த மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இருப்பினும் அந்த ஆசிரியர் மாணவிக்கு மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்கவே, ஒரு கட்டத்திற்கு மேல் அவரது தொல்லையை தாங்க முடியாத மாணவி, இதுகுறித்து நான் பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர், அவ்வாறு செய்தால் தனது வகுப்புக்கு வர முடியாது என்றும், தனது பாடத்தில் தேர்ச்சியடைய முடியாது என்றும் கூறி மிரட்டியுள்ளார்.
மேலும் பள்ளி முடிந்தவுடன் தான் கூறும் இடத்திற்கு வருமாறும் தெரிவித்துள்ளார். இதற்கு மறுத்த மாணவியை அந்த ஆசிரியர் அடிவயிற்றில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி இந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த பெற்றோர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் பள்ளிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த ஆசிரியரை வெளியே இழுத்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அத்துடன் அவரது சட்டையை கிழித்து எறிந்தனர்.
பின்னர் அவருக்கு செருப்பு மாலை அணிவித்தனர். அதையடுத்து பள்ளிக்கூடத்தில் இருந்து அவரை பொதுமக்கள் வெளியே அழைத்து வந்தனர். அங்கும் சிலர் அந்த ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். அதன்பிறகு அவரை பொதுமக்கள் ஊர்வலமாக சவனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாணவி புகாரும் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர். விசாரணையில், மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஜெகதீஷ் (வயது 39) என்பதும், இவர் அந்த மாணவி மட்டுமல்லாமல் அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜெகதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.