இண்டிகோ ஏர்லைன்ஸ் சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி
இண்டிகோ நிறுவன விமானங்களின் செயல்பாடுகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.;
புதுடெல்லி,
மத்திய அரசு சமீபத்தில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக இண்டிகோ நிறுவனம் கடந்த 6 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது. இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதையடுத்து இந்த பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, பயணிகளின் பரிதவிப்பை குறைக்க உடனடியாக விமான சேவைகளை சீரமைக்க உத்தரவிட்டது. நிலைமை சீராகும் வரை விமானிகளின் பணிநேர கட்டுப்பாடுகளை நிறுத்தி வைத்தது. அதேபோல இண்டிகோ நிறுவன விமானங்கள் ரத்து காரணமாக மற்ற விமானங்களின் டிக்கெட் கட்டணமும் பல மடங்கு உயர்ந்தது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு கட்டண உச்சவரம்பை கொண்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இண்டிகோ நிறுவன விமானங்களின் செயல்பாடுகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இண்டிகோ நிறுவனம் சனிக்கிழமை வரை விமான ரத்து மற்றும் தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.610 கோடி வரை திரும்ப கொடுத்து உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சம் கூறியுள்ளது.
இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. விமான சேவைகள் இன்னும் சீராகாததால் அதன் பங்கு விலை 9 சதவீதம் வரை சரிந்துள்ளது. பங்கு விலை ரூ.505 சரிந்து ரூ.4,865-க்கு விற்பனையாகிறது. கடந்த 7 நாட்களில் 500-க்கும் மேற்பட்ட சேவைகள் ரத்தானதால் இண்டிகோவில் சந்தை மூலதனம் ரூ.35,000 கோடி சரிந்துள்ளது.